

சென்னை மேடவாக்கம் செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் அறிவுத் திருவிழா – ‘டிஜிட்டல் கண்ணே’ எனும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
நவீன அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளை எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், அவற்றின் சாதக-பாதகங்களை அறிந்து தெளியும் வகையிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னை, மேடவாக்கம் ஜல்லடியன்பேட்டை பெரும்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல் அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், காவல்துறை அதிகாரி சுதாகர், மனநல மருத்துவர் வித்யா மோகன்தாஸ், ‘அருவி’ அறக்கட்டளையின் நிறுவனர்கள் ஆஸ்பி ஜாய்சன், ரேச்சல் விக்டர், செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் டாக்டர் ஆர்.கிஷோர்குமார், பள்ளி முதல்வர் சாந்தி சாமுவேல் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்வில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் தொடர்பான விளக்கங்களை அளிப்பதோடு, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.