‘ஜன் தன்’ மூலம் மோசடி: விசாரணையில் அம்பலம்

‘ஜன் தன்’ மூலம் மோசடி: விசாரணையில் அம்பலம்
Updated on
1 min read

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை, சைபர் கிரிமினல்கள் ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடிசெய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸார் விசாரித்தபோது, யுபிஐ வசதி மூலம் 4 ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டு, எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட 4 ஜன்தன் கணக்கு வாடிக்கையாளர்களை போலீஸார் விசாரித்தபோது அவர்கள் அப்பாவிகள் என்பது தெரியவந்தது. வங்கி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு 4 பேரையும் ஒரு கும்பல் அணுகி ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அவர்களை நம்பி ஆதார், ரேஷன் அட்டை, பிபிஎல் அட்டை, விரல் ரேகை பதிவு ஆகியவற்றை 4 பேரும் கொடுத்துள்ளனர். பின்னர் 4 பேருக்கும் வங்கி கணக்குபாஸ் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களது விரல் ரேகையைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் ஜன் தன் கணக்குகளில் இருந்து ரூ.9 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்தவர்கள் யார் என்பதை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அவர் தன்னை வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பெண் என்று கூறி, தொழிலதிபருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளார். இதற்கு முதல்கட்டமாக ரூ.19.30 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் யுபிஐ மூலம் செலுத்த கோரியுள்ளார். அதன்படி தொழிலதிபரும் ரூ.19.30 லட்சத்தை செலுத்தியுள்ளார். இறுதியில் வர்த்தக ஒப்பந்தம் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து டெல்லி குருகிராம் போலீஸில் அவர் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணையில் மிசோரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஜன் தன் வங்கிக்கணக்குகளில் பணம் டெபாசிட்செய்யப்பட்டு, எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மோசடி பெண் போலீஸ் பிடியில் சிக்காமல் எளிதாக தப்பிவிட்டார்.

இந்த வகையில் டெல்லியில் ஒவ்வொரு மாதமும் 150 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சிலவழக்குகளில் ஜன் தன் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே மோசடி நடைபெறுகிறது. சில வழக்குகளில் ஜன் தன் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளை இடைத்தரகர்களிடம் குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்திருப்பது தெரியவருகிறது.

இத்தகைய மோசடிகளைத் தடுக்க ஜன் தன் வங்கிக் கணக்குகளை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம் என்று வங்கித்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in