

மத்திய அரசு தான் கடைப்பிடிக்கும் கொள்கைகளில் அடிப்படையான சில மாற்றங்களை செய்யாமல் இந்தியாவில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற துயரத்தை மாற்றமுடியாது என, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யு., அலுவலக திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்திய அரசின் பொருளாதார கொள்கை காரணமாக தமிழகத்தில் மோட்டார் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் செயல்பட்டு வந்த தோல் தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மூடப்பட்டுள்ளது. சின்னாளபட்டி கைத்தறிதொழில், கட்டில், பீரோ தொழில்கள் என அனைத்து தொழில்களிலும் நெருக்கடிக்குள்ளாகி வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேநிலை தான் இந்தியா முழுவதும் உள்ளது. மத்திய அரசு தான் கடைப்பிடிக்கும் கொள்கைகளில் அடிப்படையான சில மாற்றங்களை செய்யாமல் இந்தியாவில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற துயரத்தை மாற்றமுடியாது.
ஜனவரி 8 ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் சிஐடியு முழுமையாக பங்கேற்கும். ரூ.18 ஆயிரம் குறைந்த ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும்.
பணிபாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. ஆன்லைன் வர்த்தகம் என்பது 10 கோடி சில்லறை வியாபாரிகளை அழிக்கின்ற ஒரு ஏற்பாடு. 45 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு வியாபாரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. இருக்கிற வேலைவாய்ப்பை பாதுகாக்காமல் புதிய வேலைவாய்ப்பை எப்படி உருவாக்கப் போகிறார்கள். வேலைஇழப்புகள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
ஜிஎஸ்டி வரியை மீண்டும் உயர்த்தினால் உற்பத்தியில் சரிவு ஏற்படும். விற்பனையில் பாதிப்பு ஏற்படும். அதனால் வேலையிழப்பு ஏற்படும். மக்களிடம் வாக்கும் சக்தி குறையும். பாரதிய ஜனதாவின் பிணைக்கைதிகள் போல் அதிமுக அமைச்சர்கள் உள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டு ஆண்டுக்கு மாநில அரசுக்கு வரவேண்டிய ஆறாயிரம் கோடி நிதியை வரவிடாமல் செய்திருக்கிறது.
அதிமுக அரசு. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பயந்து ஒரே நாளில் தேர்தலை வைக்காமல் இன்ஸ்டால்மென்ட் முறையில் தேர்தலை நடத்துகிறார்கள், என்றார்.