

தேனி மாவட்டத்தில் உள்ள பலரும் கேரளா எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக இப்பகுதி வேட்பாளர்கள் ஜீப்பில் முக்கிய பிரமுகர்களுடன் அங்கு சென்று ஆதரவு கேட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்குள்ள பலரும் கூலித்தொழிலாளர்களாக கேரளாவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக சின்னமனூர், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, புலிக்குத்தி, கம்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் எஸ்டேட் வேலைக்காக குடும்பத்துடன் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
கஜானாப்பாறை, பூப்பாறை, ராஜகுமாரி, சின்னக்கானல் மற்றும் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
மாதம் ஒருமுறை இவர்கள் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவர்களுக்கான ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சொந்த கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் இதுபோன்ற வாக்காளர்களின் விபரங்களை வேட்பாளர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தளவில் வார்டுகளில் ஓட்டுக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வெற்றி, தோல்வியை சில ஓட்டுக்களே தீர்மானிக்கும் என்பதால் வேட்பாளர்கள் தங்கள் பகுதி வாக்காளர்களை கேரளாவில் சந்தித்து ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
தாங்கள் செய்ய உள்ள நல்ல திட்டங்களை எடுத்துக் கூறுவதுடன், சாதி, குடும்ப தொடர்புகள் உள்ளிட்டவற்றை முன்னுறுத்தியும் அவர்கள் ஆதரவு கேட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் அன்று சொந்த ஊர்க்கு வந்து செல்வதற்கான செலவு தொகையையும் சிலர் கொடுத்து வருகின்றனர்.
இதே போல் போட்டி வேட்பாளர்களும் கேரளாவிற்கு சென்று வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். நான்குவிதமான பதவிகளுக்கு போட்டி நடைபெறுவதால் ஏராளமானோர் இதுபோன்று கேரளா சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஊரிலும் கணிசமான ஓட்டுக்கள் இருப்பதால் கேரளா சென்று ஆதரவு கேட்க வேண்டிய நிலை உள்ளது. ஜீப் வாடகை, முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்வது என்று செலவு அதிகரிக்கிறது என்றனர்.
ஊரக தேர்தலில் ஊரின் சிறிய பகுதிகளுக்குள் ஆதரவு கேட்டு வரும் மற்ற வேட்பாளர்களுக்கு மத்தியில் வாக்கு கேட்டு வெளிமாநிலம் வரை செல்ல வேண்டிய நிலை இப்பகுதி வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.