

தேனி மாவட்டம் வழியே சபரிமலைக்குச் செல்லும் வாகனங்கள் நாளை முதல் கம்பம்மெட்டு ஒருவழிப்பாதையில் செல்ல போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேனி, கம்பம், குமுளி வழியே பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
அதே போல் சுவாமி தரிசனத்திற்குப் பிறகு இதே வழித்தடத்தில் ஊர் திரும்புகின்றனர். கூடலூரில் இருந்து குமுளி வரையிலான பாதை மலைப்பாதையாகும். கொண்டை ஊசி வளைவுகளும், குறுகிய பாதையாகவும் இருப்பதால் சபரிமலை சீசன் நேரத்தில் இப்பகுதி போக்குவரத்தில் சிரமம் ஏற்படும்.
மேலும் கம்பம், குமுளியில் நிறுத்தப்படும் பக்தர்கள் வாகனங்களால் பெரும் இடையூறும் ஏற்பட்டு வருகிறது.
எனவே நாளை காலை (டிச.20) 10 மணி முதல் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேனியை கடந்து செல்லும் ஐயப்பபக்தர்கள் வாகனம் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு, ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்காயம், எரிமேலி வழியே பம்பை செல்ல வேண்டும்.
அதே போல் சபரிமலையில் இருந்து திரும்பி வரும் போது பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனி செல்லலாம்.
நாளை முதல் இந்த வழித்தட மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளதால் முக்கியமான சாலை சந்திப்புகளும் அதிகமான போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதலை மேற்கொள்ள உள்ளனர்.