ஜனநாயகத்தின் இடத்தை சர்வாதிகாரம் பறித்துக் கொள்கிறது: ராமச்சந்திர குஹா, யோகேந்திர யாதவ் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின்: கோப்புப்படம்
ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்துக்குப் பின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.19) குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

ஹூப்பள்ளி, கலாபுர்கி, ஹசன், மைசூரு, பெல்லாரி ஆகிய மாவட்டங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு நகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் எழுத்தாளரும், வரலாற்று அறிஞருமான ராமச்சந்திர குஹா பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ராமச்சந்திர குஹாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்வராஜ் அபியான் கட்சி தலைவர் யோகேந்திர யாதவும் கைது செய்யப்பட்டார். இருவரின் கைது நடவடிக்கைகளையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரது உரிமைகளை நசுக்கும் விதமாக அவர்களை கைது செய்துள்ள அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கண்டிக்கிறேன்.

டெல்லியின் பல பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது கருத்துரிமைக்கு எதிரானதாகும்.

எதிர்ப்புக் குரல்களுக்கான இடம் பறிக்கப்படும்போது, ஜனநாயகத்தின் இடத்தை சர்வாதிகாரம் பறித்துக் கொள்கிறது" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in