

துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்குத் தொடரப்படுவது வேதனையளிப்பதாக உதகையில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் கவலை தெரிவித்தார்.
சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் இணைந்து 'வேந்தரின் இலக்கு 2030: தொழில் துறை சகாப்தம் 4.0-ல் புதுமையான கல்வி முறை' என்ற உயர் கல்வி மாநாட்டினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. நான் மாநிலஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தராகப் பதவியேற்ற நேரத்தில், மாநிலத்திலுள்ள 20 பல்கலைக்கழங்களில் 6 பல்கலைக்கழகங்களுக்கு தலைமை இல்லாமல் இருந்தது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால் அவற்றின் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. சில பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர் பதவி ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்தது.
துணைவேந்தர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் தரம் மற்றும் தேர்வுச் செயல்பாடுகள் குறித்து ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரண்டு முன்னாள் துணைவேந்தர்களின் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சோதனை நடத்தியது. பதவியிலிருந்த துணைவேந்தர் கைது செய்யப்பட்டது மற்றும் முன்னாள் பதிவாளரின் தற்கொலை ஆகிய நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன.
துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்குத் தொடரப்படுவது எனக்குக் கவலையளிக்கிறது. இது நம்முடைய நாகரிகத்தின் மீதுள்ள கறையாகும். நான் ஆளுநராகப் பதவியேற்ற பிறகு, துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. துணைவேந்தர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெளிப்படைத்தன்மை உயர்கல்வித்துறையின் அனைத்து நிலையிலும் அறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, மாணவ சமுதாயத்தின் மத்தியில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், ஒழுக்கத்துடனும், ஊழலற்றதாக மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகளுடன் பணியாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயர் கல்விக்கான இடங்கள். அதில் வெளிப்படையான செயல்பாடு மற்றும் நேர்மையைக் கடைப்பிடிப்பது முக்கியம். துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு முறையை உருவாக்கிய பின்னர் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுத்தல், மாணவர்கள் சேர்க்கை, புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், புதிய படிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்தல், பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் நேர்மையான, வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் நடத்தை மூலம் இளைய தலைமுறைக்கு வழிகாட்டி விளக்குகளாக செயல்படவேண்டும். அதன் மூலம், சமூகத்தில் முன்னேற்றம் மற்றும் செழிப்பு என்ற நிலையை அடைய முடியும்''.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.