புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மனித சங்கிலிப் போராட்டம்

படங்கள்: எம்.சாம்ராஜ்
படங்கள்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவ, மாணவிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தினர்.

மேலும், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில், புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஒற்றுமையுடன் எந்த வேறுபாடுமின்றி தங்கள் போராட்டம் தொடரும் என்று உறுதிமொழி எடுத்த மாணவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இச்சூழலில் வரும் 23-ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் புதுச்சேரி வர உள்ளார். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவில் பலப்படுத்தப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in