

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், பணியாளர்களைப் பாதுகாக்க அமெரிக்காவை போல் ‘கோடு வைலட் அலர்ட்’ திட்டத்தைச் (code violet systems) செயல்படுத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் கடந்த சில நாட்களுக்கு முன் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் மருத்துவ மாணவியை நோயாளியுடன் இருந்த 2 பேர் தாக்கினர். இதில் அந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் மருத்துவர்கள் ‘டீன்’ சங்குமணியை சந்தித்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பாதுகாப்புக்கு 3 கோரிக்கைகளை வலியுறுத்தி னோம். அதில் முக்கியமான 7 சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளி யுடன் உடன் இருக்கும் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வார்டுகளுக்குள் நுழைய முடியாதபடி கிரீல் கேட் போட்டு அங்கு பணிபுரியும் செக்யூரிட்டிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஐடி கார்டு, கைரேகை வைத்தால் கதவு திறக்கும் நடை முறையைக் கொண்டு வர வேண்டும்.
நோயாளிகளுடன் உடன் இருப்பவர்கள் வெளியே வந்தால் மீண்டும் வார்டுகளுக்குள் செல்வதற்கு செக்யூரிட்டிகள், அவர்களுடைய ஐடி கார்டு, கைரேகை வைத்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதனால், செக்யூரிட்டிகளை மீறியும், இந்த க்ரில் கதவை தாண்டியும் மற்றவர்கள் யாரும் வார்டுகளுக்குள் எளிதாகச் செல்ல முடியாது.
இந்த வசதியை 15 நாட்களில் செய்து தருவதாக ‘டீன்’ உறுதி யளித்து உள்ளார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களைத் தாக்கினால்
என்னென்ன தண்டனைகள், சேதம் விளைவித்தால் நஷ்டஈடு எவ்வளவு என்ற அந்தச் சட்டத்தின் சாராம்சங்களை டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பி நோயாளிகள், பார்வை யாளர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அமெரிக்காவில் நோயாளிகள் ஆக்ரோஷமாக மாறுகிறார்கள், பிரச்சினை ஏற்படுகிறது என்றால் செக்யூரிட்டிகள் சம்பவம் நடக்கும் வார்டில் ஒரே இடத்தில் கூடுவதற்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்க மருத்துவமனைகளில் ‘கோடு வைலட் அலர்ட்’ திட்டம் (code violet systems) நடைமுறையில் உள்ளது.
இதில் ஒவ்வொரு அலர்ட்டுக்கு ஒரு வண்ணமும் கொடுத்து அலர்ட் ‘செக்யூரிட்டிகள்’ எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். இந்தத் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இந்த ‘கோடு வைலட் அலர்ட்’ நடைமுறையில் விசில் அடித்து செக்யூரிட்டிகள் ஒரே இடத்தில் சேருவது, மருத்துவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வது, துறைத் தலைவர்கள், மூத்த மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளன. இதைக் கடைப்பிடிக்க அதற்கான பயிற்சியை செக்யூரிட்டிகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழங்க வலியுறுத்தி உள்ளோம். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பிலும் வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனை `டீன்' சங்குமணியிடம் கேட்டபோது, மருத்துவர்கள் வலியுறுத்திய பாதுகாப்புக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன, என்றார்.