

வயது முதிர்வின் காரணமாக, உடல்நிலை தளர்ந்து, தன்னுடைய இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன். அவர் தன்னுடைய 98-வது பிறந்தநாளை இன்று (டிச.19) கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், க.அன்பழகனின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
க.அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தனிநபர்களைவிட தத்துவமே பெரியது, ஏற்றுக் கொண்ட தலைமையே வலிமை மிக்கது, தன்மான இயக்கமே உயிருக்கு நிகரானது எனத் தனது மாணவப் பருவம் முதல் இன்று வரை செயலாற்றிச் சிறப்பு செய்து வருபவர் க.அன்பழகன். பெரியாரின் பகுத்தறிவு – சுயமரியாதை - சமூக நீதிக் கொள்கைகளை ஏந்தி, அண்ணாவின் கண்ணியம் மிக்க ஜனநாயக அரசியல் வழியில் பயணித்து, கருணாநிதிக்குத் தோள் கொடுத்து, உற்ற நண்பராக - அண்ணனாக விளங்கி, திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி, அதனை அனைத்துத் தரப்பினருக்குமான அழகிய அடுக்கு மாடிக் குடியிருப்பாக உருவாக்கிக் காட்டியதில் க.அன்பழகனுக்கு இணையிலாப் பங்குண்டு.
திமுக முதன்முதலில் தேர்தல் களத்தைச் சந்தித்த 1957 பொதுத்தேர்தலில் அண்ணா, கருணாநிதியுடன் வெற்றி பெற்ற 15 பேரில், நமது க.அன்பழகனும் ஒருவர். அதன்பிறகு, வெற்றிகளையும் தோல்விகளையும் தேர்தல் களங்களில் சந்தித்திருந்தாலும், இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று, திராவிட அரசியல் தத்துவப் பாடம் நடத்திய தகுதி நிறைந்த பெருமை க.அன்பழகனுக்கு உண்டு.
சட்டப்பேரவையில் அவர் முன் வைத்த வாதங்கள் அழுத்தமானவை. நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல்கள் வலுவானவை. அமைச்சராக அவர் நிறைவேற்றிய திட்டங்கள் என்றும் பயனளிப்பவை. இவை அனைத்தையும் திமுக ஏந்தியிருக்கும் சித்தாந்தத்தின் வழியே செயல்படுத்திக் காட்டுவதில் க.அன்பழகன் உறுதியாக இருந்தவர்.
பேராசிரியர் ஆயிற்றே! அவரிடம் மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும். அவர் வைக்கும் தேர்வுகளை நல்ல முறையில் எழுதிட வேண்டும்.
1980-களின் தொடக்கத்தில் திமுகவின் இளைஞரணி உருவாக்கப்பட்டபோது, என்னுடைய பணியினைப் பார்த்து, அலசி, மதிப்பிட்டு, பாராட்டு என்கிற மதிப்பெண்ணை வழங்கினார். அவர் வைத்த தேர்வு என்பது மிக முக்கியமானது.
திமுகவின் தலைமை அலுவலகமாக இருந்த அன்பகத்தை இளைஞரணிக்காகக் கோரினோம். திமுகவின் மற்ற அணியினர் சிலரும் அதே கோரிக்கையை வைத்தனர். க.அன்பழகன், கழக நிதியாக 10 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுக்கும் அணிக்கே அன்பகம் என்ற தேர்வினை வைத்தார்கள். அந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பல பணிகளை நிறைவேற்றி, அவற்றுக்கான பங்கேற்புக் கட்டணமாகத் திரட்டிய நிதியைக் கொண்டு, க.அன்பழகன் இலக்காக நிர்ணயித்த 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக, 11 லட்சம் ரூபாயை நிதியாகத் திரட்டித் தந்து, இளைஞரணிக்கு அன்பகத்தை சொந்தமாக்கியதை என்னால் என்றென்றும் மறக்கவே முடியாது.
1967 பொதுத்தேர்தலுக்கு முன்பு, திமுகவின் தேர்தல் நிதியாக 10 லட்சம் ரூபாயை அண்ணா இலக்காக நிர்ணயித்ததையும், அன்றைய கழகப் பொருளாளரான தலைவர் கருணாநிதி 11 லட்சம் ரூபாய் நிதியளித்து, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும்போது 'திருவாளர் 11 லட்சம்' என்ற அடைமொழியுடன் அண்ணா அழைத்ததையும் க.அன்பழகன் சுட்டிக்காட்டி, அதுபோல அன்பகத்திற்கான 10 லட்சம் ரூபாய் இலக்கினைக் கடந்து, 11 லட்சம் ரூபாய் நிதியளித்ததைப் பாராட்டிப் புகழ்ந்தது, திமுகவின் மாணவனாக நான் பெற்ற முதல் வெற்றிச் சான்றிதழ் மட்டுமல்ல, விருது எனும் பெருமையை எப்போதும் நினைவுகளில் தேக்கி வைத்திருக்கிறேன்.
இளைஞரணிச் செயலாளராக இருந்த என்னிடம் க.அன்பழகன் காட்டிய அன்பு கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக உயர்ந்த ஒவ்வொரு நிலையிலும் அப்படியே வெளிப்பட்டது. திமுகவின் தலைவர் என்ற பொறுப்பினை சுமந்திருக்கும் நிலையிலும், அதே அன்பை, அன்பின் ஆழத்தை தன் உடல்நிலையையும் மீறி, உள்ளம் திறந்து வெளிக்காட்டி, உவகை கொள்ள, க.அன்பழகன் ஒரு போதும் தயங்கியதே இல்லை.
2018 ஆகஸ்ட் 7-ம் நாள் கருணாநிதியை இயற்கை சதி செய்து நம்மிடம் இருந்து பிரித்த நிலையில், என்ன செய்யப்போகிறோம், எப்படிச் செயலாற்றப் போகிறோம் எனத் தவித்து நின்றபோது, தந்தையின் இடத்திலிருந்து என்னை ஆறுதல்படுத்தி, அரவணைத்து, வாஞ்சையுடன் வழிகாட்டியவர் அவர். கருணாநிதி உடல்நலன் குன்றியதிலிருந்தே எனக்கு ஆலோசனைகள் வழங்கி, இயக்கப் பணிகள் தொய்வின்றி நடைபெறச் செய்ததுடன், கருணாநிதியை அடிக்கடி சந்தித்து, அவரது இதயத்துக்கு இதமளித்தவர் அவர்.
இப்போது அவரது உடல்நிலை தளர்ந்திருக்கிறது. இயல்பாக வெளியிடங்களுக்குச் செல்ல முடிவதில்லை. இருந்தபோதும், திமுகவின் லட்சிய முழக்கமாகத் திகழும் முரசொலி நாளிதழை புரட்டிப் படிப்பதும், பொதுச்செயலாளராக அவர் ஒப்புதல் அளிக்க வேண்டியவற்றைக் கவனிப்பதும் தொடர்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை நேரில் சந்தித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
"அறிவாலயம் போகலாமா?" என நான் அவரிடம் கேட்கும்போது, அவர் கண்களில் ஆர்வம் மின்னிடும். ஆனால், உடல் தளர்வாக இருக்கும். அதனை சுட்டிக்காட்டி, ஏக்கத்துடன் ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. என்னைத் தொட்டு, வாழ்த்திடுவார்; பழைய நினைவுகளில் மூழ்கிடுவார். அரிய புகைப்படங்களை அவரிடம் காட்டும்போது எத்தகைய லட்சியப் பாதையை, நெருப்பாற்றை நீந்தி இந்த இயக்கம் வந்திருக்கிறது, வளர்ந்திருக்கிறது என்பதை அவர் உணர்வு வெளிப்படுத்தும்.
கருணாநிதியின் பழைய உரைகளின் தொகுப்புகளைக் கேட்டாலும், தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் அவரது விழிகளில் நீர் துளிர்க்கிறது. கொள்கை வழித் தோழமையுணர்வுடன் அண்ணன் - தம்பிகளாகப் பழகிய பாசம், பாசத்தின் துடிப்பு எத்தனை ஆண்டுகளாயினும் விட்டுப்போகுமோ!
அந்தப் பாசத்தை என்னிடம் அவர் காட்டிடுவார். அதில் தந்தைக்குரிய அன்பு மிகுந்திருக்கும். தலைவருக்குரிய வழிகாட்டுதல் நிறைந்திருக்கும். பேராசிரியர் அவர்களை எப்போது சந்தித்தாலும், அந்தச் சந்திப்பு எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் இயக்கத்தை வழிநடத்துவதற்கான தத்துவ வலிமையையும் தருகிறது.
"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ" என்கிற கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகளைப் போல, சித்தாந்தச் சிங்கமாக கர்ஜித்த இயக்கமே குடும்பம் எனக் கொண்ட எப்போதும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத நேற்றைய தலைமுறை முதல் நாளைய தலைமுறை வரை கடைப்பிடிக்க வேண்டிய லட்சியத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிற க.அன்பழகன், திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களில் அதிக காலம் வாழ்ந்து அற்புதமாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர் என்ற பெருமையுடன், 98-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பேராசிரியரை வணங்குவதிலும் வாழ்த்துவதிலும் வற்றாத இன்பமும் வாடாத மகிழ்ச்சியும் அடைகிறேன். நூறாண்டு கடந்தும் சீரோடு வாழ வாழ்த்தி வணங்கிடுவோம்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.