

என்எல்சியில் தொமுச தொழிற் சங்கத் தலைவர் திருமாவளவன் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவுப் பணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஒப்பந்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், நிலக்கரி வெட்டும் பணி மற்றும் மின் உற்பத்தி பாதிக்கப்படும்.
நெய்வேலி என்எல்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவராக இருப்பவர் திருமா வளவன். இவர், என்எல்சி இரண் டாவது சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவரை, கடந்த ஆண்டு ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்தத்தை சிறப்பு தலைவராக இருந்து வழி நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் என்எல்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
இதையடுத்து, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் நேற்று நெய்வேலி சிஐடியூ அலுவலகத் தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தொமுச தலைவர் திருமாவளவன் பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறும் வரை நேற்று - இரவு ஷிப்ட் பணி (10 மணி) முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபோல, முதலாவது சுரங்க விரிவாக்கம் வாசல் முன்பு நிரந்தர தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.
என்எல்சியில் ஏற்கெனவே நிரந்தர தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுடன் 23-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடை பெறுகிறது. இந்த நிலையில், என்எல்சியில் பணியாற்றும் 10 ஆயிரத்து 500 ஒப்பந்த தொழி லாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நிலக்கரி வெட்டி எடுப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். அதனால், மின் உற்பத்தியும் கடுமையாக பதிப்புக்குள்ளாகும் என தெரிகிறது.