

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப் படுத்திட கடலூர் வேளாண் இணை இயக்குநர் முருகன் விவசாயிகளுக்கு ஆலோசனை வாங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்:
கடலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குளிர் பருவ நிலை மாற்றத்தால் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதிகளவு தழைச்சத்து உரம் இடப்படுகின்றன. இந்த இரு காரணங்களால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் காட்டு மன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி போன்ற டெல்டா வட்டாரங்களில் தென்படுகிறது.
நோய் கிருமிகள் காற்று, விதை,நோயுற்ற வைக்கோல் ஆகியவற்றின் மூலம் பரவும். இந்நோய் பயிரின் இலைகள்,தண்டு கணுக்கள் மற்றும் பயிரின் கழுத்து பகுதிகளை தாக்கும். இலைகளில் சிறிய பழுப்பு நிற புள்ளிகள் உண்டாகும். இந்த புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறமாகவும், ஓரங்கள் பழப்பு நிறமாகவும் இருக்கும். தண்டுகள் ஒடிந்து போக கூடும். தீவிர தாக்குதலின் போது தூரத்தில் இருந்து பார்க்கும் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும்.
பயிர்களில் பூக்கும் தருணத்தில் குலைநோய் தாக்குதல் ஏற்படுமாயின் கதிரின் அடிப்பகுதி பாதிக்கப்படும். இது கழுத்து குலைநோய் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட கதிர்கள் முதிர்ச்சியடையாது. மகசூல் பாதிக்கப்படும்.
குலை நோய் அறிகுறி தென்பட்டால் முதலில் தழைச்சத்து (யூரியா) உரமிடுவதை தாமதப்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக நீர் பாசனத்தினை அளிக்க வேண்டும்.
விரைவில் வடிவதை தவிர்க்க வேண்டும். களைகள் மற்றும் மாற்று புரவலன்களை கட்டுப்படுத்தி பராமரிக்க வேண்டும். வயலில் உள்ள பூஞ்சைகள் பிற இடத்திற்கு பரவுவதை தடுக்க பாதிக்கப்பட்ட அனைத்து தாவர கழிவுகளையும் அழித்து விட வேண்டும்.
மண்ணில் சிலிக்கான் பற்றாக்குறை தென்பட்டால் சிலிக்கான் உரங்களை பயன்படுத்தவும். நோயின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளசோல் 75 டபல்யூபி 120 கிராம் அல்லது கார்பன்டசிம் 150 கிராம் அல்லது சூடோமோனாஸ் 1 கிலோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
பூக்கும் தருணத்தில் கழுத்துக்குலை நோய் தாக்குதல் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளசோல் 75விபி 120 கிராம் அல்லது அசாக்சிஸ்டிரோபின் 25 எஸ்சி 200மி.லி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.