Published : 19 Dec 2019 09:42 AM
Last Updated : 19 Dec 2019 09:42 AM

திண்டுக்கல் அருகே வாக்காளர்களை கவர பிரியாணி விருந்து: தடுத்து நிறுத்திய தேர்தல் அலுவலர்கள்

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற தேர்தல் அலுவலர்கள் விருந்தை தடுத்து நிறுத்தினர்.

திண்டுக்கல் அருகேயுள்ள செட்டிநாயக்கன்பட்டி கிராமஊராட்சித் தலைவர் பதவிக்குவளர்மதி என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள நூற்பாலை வளாகத்தில் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து நடைபெறுவதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் பிரியாணி விருந்து நடப்பதைக் கண்டனர். பிரியாணியை ருசித்துக் கொண்டிருந்த பலரும் தேர்தல் அதிகாரிகளை பார்த்தவுடன் உணவை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடினர். அதிகாரிகளும் பிரியாணி விருந்தை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர் பாஸ்கரன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில்,தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கியதாகவும், தேர்தலுக்கும் விருந்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பின்னர், தேர்தல் காலங்களில் இதுபோன்ற விருந்து நடத்தக்கூடாது எனஅலுவலர்கள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறும்போது, தேர்தலுக்காக பணமும், பிரியாணியும் வழங்குவதாகத் தகவல் கிடைத்தது. விருந்து வழங்கியவர் ஊராட்சித் தலைவர் தேர்தலில்போட்டியிடும் வேட்பாளரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் விருந்துடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x