

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே பூச்சிக் கொல்லி மருந்து குடித்து, விவசாயி தற்கொலை செய்து கொண்டார். உயர் மின்கோபுரம் அமைப்பதற்காக விளைநிலத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் இருந்து திருப்பூர் மாவட்டம் புகளூர் வரை உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே பள்ளக்கானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (45) என்பவரின் விளைநிலத்தில் இருந்த மரங்கள் உயர்மின்கோபுரம் அமைக்க சில தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டது.
இந்நிலையில், மரங்கள் வெட்டப்பட்ட இடத்திலேயே கடந்த 14-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பெருமாள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு அன்னக்கிளி (40) என்ற மனைவியும், நதியா (25), சக்திவேல் (23), இளவரசன் (19), விக்னேஷ் (18) என 4 குழந்தைகளும் உள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன்கள் சக்திவேல், விக்னேஷ் உள்ளிட்டோர் கூறியதாவது: எங்கள் நிலத்தின் நடுப்பகுதி வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கப்படுவதால் ஒட்டுமொத்த நிலமும் பாதிக்கப்படுகிறது. இதுவரை எவ்வித இழப்பீட்டுத் தொகையும் தரவில்லை. நிலத்தில் இருந்த தென்னை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மரங்களை அதிகாரிகள் வெட்டினர். இதுகுறித்து எங்கள் தந்தை கேட்டபோது அவரை மிரட்டியுள்ளனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் நிலத்திலேயே பூச்சிக் கொல்லி மருந்து குடித்துவிட்டார். சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.