

திருச்சியில் ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட இளைஞரின் வீட்டில் மீண்டும் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன் அவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாச நகர் விரிவாக்கப் பகுதியிலுள்ள நேதாஜி நகரைச் சேர்ந்த ஷேக் தாவூத் மகன் சர்புதீன்(21). டிப்ளமோ படித்துள்ள இவர், மணிகண்டம் அருகே அளுந்தூர் பிரிவு சாலையில் ஜெராக்ஸ் மற்றும்கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் கேரளாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் குழுவினர் கடந்த நவ.30-ம் தேதி திருச்சிக்கு வந்து, சர்புதீன் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சர்புதீனின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், சமூக வலைதளங்களில் அவரது உரையாடல்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, சர்புதீன் மட்டுமின்றி அவரது மைத்துனரான அதே பகுதியிலுள்ள நத்தார் தெருவில் வசிக்கும் அப்துல்சமது மகன் அப்துல் ஜப்பார்(24) மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இருவரையும் கேரள மாநிலம் கொச்சியிலுள்ள என்.ஐ.ஏ மண்டல தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் இருந்து டிஎஸ்பி ஒருவர் தலைமையில் 5 பேர் கொண்ட என்.ஐ.ஏகுழுவினர் நேற்று முன்தினம் மீண்டும் திருச்சிக்கு வந்தனர். சர்புதீனின் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்த அவர்கள், சர்புதீன் மனைவிஆயிஷாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சர்புதீன் மற்றும் ஆயிஷா ஆகியோர் பயன்படுத்திய பழைய செல்போன்கள், சிம் கார்டுகளை கேட்டுப் பெற்று அவற்றை ஆய்வு செய்தனர். மேலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையின்போது சர்புதீன் அளித்த சில தகவல்கள் குறித்து பெண் ஆய்வாளர் ஒருவர் மூலமாக ஆயிஷாவிடம் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று மாலை கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.