ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; வேட்புமனு திரும்பப் பெற இன்று கடைசி நாள்: பிரச்சாரம் நாளை முதல் சூடுபிடிக்கும்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; வேட்புமனு திரும்பப் பெற இன்று கடைசி நாள்: பிரச்சாரம் நாளை முதல் சூடுபிடிக்கும்
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெறப்பட்ட வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த16-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

அதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்கள், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 54 ஆயிரத்து 747 மனுக்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32 ஆயிரத்து 939 மனுக்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 992 மனுக்கள் என மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. அதில் முறையாக பூர்த்திசெய்யப்படாத ஏராளமான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (டிச.19) கடைசி நாளாகும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும், வேட்பாளரை தங்கள்கட்சி சார்பில் போட்டியிட அனுமதிக்கும் ஏ மற்றும் பி படிவங்களைப் பூர்த்தி செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலம் கடந்து படிவங்கள் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராகக் கருதப்படுவார் என்று மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

மாலை 3 மணிக்கு மேல், அகர வரிசையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.அதன் பின்னர் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். அரசியல் கட்சிகள் ஏ மற்றும் பி படிவங்களை சமர்ப்பித்து இருப்பின், அதன் வேட்பாளர்களுக்கு அக்கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள்வேட்புமனுவிலேயே 3 சின்னங்களைக் குறிப்பிட்டு இருப்பர். அது, வேறு எந்த வேட்பாளரும் கோராத சின்னமாக இருந்தால், அந்த சின்னம் வழங்கப்படும். ஒரே சின்னத்தை 2-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கோரினால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 27 மாவட்டங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் வேட்புமனுக்கள் பரிசீலனை உள்ளிட்ட தேர்தல் பணிகளை அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

20-ம் தேதி (நாளை) முதல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். அதில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்குமாறு தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனி சாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in