

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத விரக்தியில், முதல்வர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக பிரமுகரை போலீஸார் மீட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், தொட்டிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஓமலூர் 8-வது வார்டில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு செய்து இருந்தார். ஆனால், அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த முருகன் இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டு முன்பு காத்திருந்தார்.
ஏற்கெனவே ஐந்து முறை மனு அளித்தும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முறையும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, முதல்வர் வீட்டு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முருகனைக் காப்பாற்றி, அவர் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனைப் பிடுங்கி மீட்டனர்.
முருகன் மீது தண்ணீரை ஊற்றி, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முதல்வர் பழனிசாமி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்று சிறிது நேரத்தில் அதிமுக பிரமுகர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.