Published : 18 Dec 2019 08:04 PM
Last Updated : 18 Dec 2019 08:04 PM

ரயில் நிலைய பார்சல் பிரிவில் பல மாதங்களாக உள்ள கையெறி குண்டுகள்: ராணுவ விலாசம் மாறியதால் வந்த குழப்பம்

ரயில் பார்சலில் வந்த கையெறி குண்டுகளை ராணுவத்தினர் 8 மாதங்களாக வாங்கவில்லை என்று அபராதம் விதிக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் சென்னை ராணுவத்துக்கும் அந்த குண்டுகளுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரியவந்துள்ளது.

அந்தமானில் உள்ள இந்திய ராணுவத்தின் 72-வது படையணிக்குப் பயிற்சிக்காக நாக்பூரிலிருந்து கையெறி குண்டுகள் சென்னை வழியாக ரயிலில் அனுப்பப்பட்டது. இந்த கையெறி குண்டுகள் 172 சென்னை ரெஜிமண்ட் பெயரில் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் பார்சலில் வந்த 10 எண்ணிக்கையிலான கையெறி குண்டுகள் 172-வது ராணுவப் படையணிக்கு வந்ததாக ரயில்வே கருதியது. அதை சென்னை ராணுவப் படையணியினர் பெறவில்லை என ரயில்வே பாதுகாப்புப் படையினர், 7 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டிருப்பதாகச் செய்தி வெளியானது.

இதுகுறித்து சென்னை ராணுவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''அந்தமான் ரெஜிமண்டின் எண் 72க்கும் , சென்னையின் ரெஜிமெண்ட் எண் 172க்கும் சம்பந்தமே இல்லை. அவர்களுக்கு அனுப்பிய கையெறி குண்டுகளில் எங்களுடைய 172 என்கிற எண் உள்ளது. 72-வது ரெஜிமண்டுக்கான எண்ணுக்குப் பதில் இதைப் பதிவு செய்திருக்கலாம்.

அதனால் எண்ணைத் தவறாகப் பதிவு செய்ததால் வந்துள்ள குழப்பம் இது. மேலும், இதற்கும் சென்னை ராணுவம் இதுபோன்று ரயில் பார்சலில் எப்போதும் அனுப்புவதில்லை. வேறு முறைகள் மூலமே ஆயுதம் அனுப்பப்படும். ஆகவே இது எண்ணைப் பதிவு செய்ததால் வந்த குழப்பம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x