Published : 18 Dec 2019 01:21 PM
Last Updated : 18 Dec 2019 01:21 PM

ஜன.22 வழக்கு விசாரணைக்கு வரும்வரை குடியுரிமைச் சட்டம் அமலாகாது: திமுக வழக்கறிஞர் வில்சன் நம்பிக்கை

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் அமலாகவில்லை என அரசுத்தரப்பு சொல்கிறது. ஆகவே அடுத்த விசாரணை வரும்வரை எந்த நடவடிக்கையும் இருக்காது என தாம் நம்புவதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 59 மனுதாரர்கள் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 22-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்கில் திமுக தரப்பில் ஆஜரான மாநிலங்களவை எம்பி வழக்கறிஞர் வில்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வழக்கின் நிலை என்ன?

வழக்குகள் அனைத்தும் ஜனவரி 22-ம் தேதி அன்று விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

மத்திய அரசை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்களா?

ஆமாம் மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

என்ன மாதிரியான விளக்கம் கேட்பார்கள்?

இந்தச்சட்டம் ஏன் செல்லத்தக்கது, மக்களை எப்படி பாதிக்காது என அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கவேண்டி இருக்கும்.

அரசுத்தரப்பில் என்ன வாதிட்டார்கள்?

அட்டர்னி ஜெனரல் தரப்பில் எதிர்க்கட்சிகள் ஓவ்வொருத்தரும் ஒரு வாதத்தை எடுத்துவைப்பதால் வாதம் நீளும், ஆகவே அனைவரும் சேர்ந்து ஒரு வழக்கறிஞரை நியமித்து வாதாடலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் எங்கள் தரப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கோரிக்கை உள்ளது. ஓவ்வொரு மனுவும் விதவிதமான தளத்தில் உள்ளது. திமுகவைப்பொறுத்தவரை இலங்கைத்தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஆகவே எங்கள் மனுவை தனியாக வாதம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

எந்த அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளீர்கள்? நீதிமன்றம் இதில் எப்படி தலையிடும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?

இது அடிப்படையில் சட்டப்பிரிவு 14-க்கு எதிரான சட்டமாக உள்ளது. இதில் பாகுபாடு உள்ளது. 6 மதம் சம்பந்தப்பட்ட ஒரு சட்டமாக உள்ளது. அதுவும் 3 நாடுகள் சம்பந்தப்பட்ட சட்டமாக உள்ளது. இதில் இஸ்லாமியர்களை ஏன் விலக்கி வைக்கிறார்கள் என்பது குறித்து விளக்கமில்லை.

அதுவுமல்லாமல் இலங்கைத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள், அவர்களுக்கும் இந்தச் சட்டம் மூலம் குடியுரிமை இல்லாமல் போகிறது. ஆகவே பல தளங்களிலும் பிரச்சினை உள்ளதால் வழக்கு தொடுத்துள்ளோம்.

காங்கிரஸ் மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளார்கள்?

அவர்கள் அஸாம் மக்களுக்கு எதிராக உள்ளது, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளது, இது உலக அளவிலான குடியுரிமைச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்கின்றனர். பலரும் பலவிதமான கோரிக்கைகளுடன் வந்துள்ளனர்.

இதில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்குமா?

ஆமாம், எந்த ஒரு சட்டம் குறித்த வழக்கும் நீதிமன்ற பார்வைக்கு வரும்போது நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்றுத்தான் பரிசீலிக்கப்படும். ஆகவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் செல்லும்.

மத்திய அரசின் சட்டத்தை நீதிமன்றங்கள் தலையிட்டு மாற்ற வாய்ப்புள்ளதா?

கண்டிப்பாக வாய்ப்புண்டு. சட்டத்தைப்பொறுத்தவரை எந்த ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தாலும் ஷெட்யூல் 9 பிரகாரம் மத்திய அரசின் சட்டம், சரியாக இயற்றப்பட்டுள்ளதா? அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படையில் உள்ளதா? வேறு ஏதேனும் சட்ட மீறல் உள்ளதா என விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

அடுத்தமுறை இடைக்கால தடை விதிக்க வாய்ப்புள்ளதா?

நாங்கள் வாதத்தில் இந்தச்சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இலங்கைத்தமிழர்கள் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று கோரினோம். ஆனால் அவை அனைத்தையும் 22-ம் தேதி இதைப்பற்றி விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால் சட்டம் அமலாகவில்லை என அரசுத்தரப்பு வழக்கறிஞர் சொல்கிறாரே?

அதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்தச்சட்டம் 12/12 அன்று அமலுக்கு வந்துவிட்டது. அவர் அமலுக்கு வரவில்லை, ஆனால் ஏற்கேனவே 12/12 அமலுக்கு வந்துவிட்டது எனச் சொல்லவந்தால் ஜன.22 அன்றைய வாதத்தில் மொத்தமாக சொல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள்.

ஒருவேளை அமலாகிவிட்டது என்றுச் சொன்னால் தடை விதிக்க வாய்ப்புள்ளது என்பதால் அப்படி சொல்லியிருப்பாரோ?

எந்த ஒரு சட்டத்தையும் சட்ட ஆய்வு செய்யும்போது தடைவிதிக்க மாட்டார்கள், ஆனால் பாதிக்கப்படுவபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். அதைத்தான் நாங்கள் 12-ம் தேதியே சட்டம் அமலாகிவிட்டது, ஆனால் அமலாகவில்லை என அட்டர்னி ஜெனரல் சொல்கிறார் என்று சொன்னபோது அதை 22-ம் தேதி வாதத்தில் சொல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள்.

ஆகவே 2020, ஜனவரி 22-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்வரை இந்தச்சட்டித்தின்கீழ் நடவடிக்கை இருக்காது என்று நான் நினைக்கிறேன் .

இவ்வாறு வழக்கறிஞர் வில்சன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x