

மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதைத்தான் ஸ்டாலின் பேசுவதாகவும் சொந்தமாகப் பேசுவது போன்று தனக்குத் தெரியவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.18) சேலத்தில் செய்தியாளகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடும் இடங்களில், தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியினரும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்களே?
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை வரை கால அவகாசம் இருக்கிறது. எல்லோருக்கும் அந்தந்தப் பகுதிகளில் போட்டியிட ஆர்வம் இருக்கிறது. தங்களது கிராமத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்ப்பது இயல்பு. இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருமித்த கருத்துடன் அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும்.
கந்துவட்டி கொடுமையை தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாரே?
கந்துவட்டியைத் தடுக்க சட்டம் இயற்றியது அதிமுக ஆட்சி. தெரியாமல் நடத்தப்படும் கந்துவட்டி சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறதே?
உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 2016-ல் தேர்தலை நிறுத்தியது திமுகதான். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் வார்டு மறுவரையரையும் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டது . இதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தாகி விட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுகவுக்கு மனம் வாரவில்லை. அவர்களுக்கு எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக இல்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து திமுகவினர் நீதிமன்றம் செல்கின்றனர். இட ஒதுக்கீடு, வார்டு மறுவரையறை சரியில்லை என பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். எந்த மாவட்டத்தில், ஒன்றியத்தில் இவை சரியாக நடைபெறவில்லை என்பதைச் சரியாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி, தேர்தல் நடைபெறும் சூழலில் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதைத்தான் ஸ்டாலின் பேசுகிறார். சொந்தமாகப் பேசுவது போன்று எனக்குத் தெரியவில்லை. மக்களின் செல்வாக்கு அதிமுக கூட்டணிக்கு இருப்பதால் திமுக கூட்டணி பயப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுகவுக்கு தைரியம் இருக்கிறதா?
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.