

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காவல் துறையினர் நமக்கு ஆதரவாக இங்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள்.
அவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா? இல்லை லாரியில் ஏற்றுகிறார்களா? என ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகுதான் தெரியும். கரூரில் திமுகவினரின் ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை என ஸ்டாலின் என்னிடம் கூறினார்.
இங்கு அதிகளவு காவல் துறையினரை குவித்து அதிமுக அரசு நமக்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவை மக்களவையில் கொண்டு வரும்போது எளிதில் நிறைவேற்றி விட்டார்கள். ஆனால், மாநிலங்களவையில் வரும்போது சற்று சிக்கல் ஏற்பட்டது.
அப்போது, அதிமுக ஆதரவு தெரிவித்ததால் அங்கேயும் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது இலங்கை தமிழர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள் அதிமுகவினரிடம் சென்று ஆதரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா வருவதற்கு முக்கிய காரணமே அதிமுகதான்’’ என்றார்.