Published : 18 Dec 2019 09:48 AM
Last Updated : 18 Dec 2019 09:48 AM

நாட்டின் பொருளாதார சீர்குலைவை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய அரசு மீது முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா குற்றம்சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து பெரம்பலூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய அமைச் சரும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா பேசும்போது, ‘‘நாட்டின் அடிநாதமாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. நாட்டில் பொருளாதார சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் பாஜக அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில நிர்வாகிகள் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, ப. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், நகரச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட நிர்வாகிகள் நூருல் ஹுதா இஸ்மாயில், ஆர்.பட்டுச்செல்வி, ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் இரா.முருகேசன், திமுக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுகவினர் திரளானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கரூரில்...

கரூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசும்போது, நாட்டை பிளவுபடுத்தி, துண்டாட நினைக்கும் பாஜகவை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்புவோம். அரசு அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்த லில் திமுகவினரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய சூழ்ச்சி நடைபெறுகிறது. அதிகாரிகள் நடுநிலையாக செயல்படவேண்டும். இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணிச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ம.சின்ன சாமி,கரூர் மத்திய நகரச் செய லாளர் எஸ்.பி.கனகராஜ், வடக்கு நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் கே.கே.செல்லபாண்டியன், எஸ்.ரகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ.மெய்யநாதன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு, நகரச் செயலாளர் நைனாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x