Published : 18 Dec 2019 09:46 AM
Last Updated : 18 Dec 2019 09:46 AM

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் விழாவுக்காக பானை உற்பத்தி தீவிரம்: மழையும், விழிப்புணர்வும் கைகொடுக்கும் என நம்பிக்கை

தருமபுரி

பொங்கல் விழாவை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் பானை உள்ளிட்ட மண்பாண்டங்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர்களின் முக்கிய திருவிழா தைப்பொங்கல். இந்த விழாவின்போது பெரும்பாலான குடும்பங்களில் புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ந்திருப்பர். கிராமங்கள் மட்டு மன்றி நகரங்களிலும் பொங்கல் விழாவின்போது புதுப்பானையில் பொங்கலிடும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர். எனவே, பொங்கல் திருவிழாவை ஒட்டி மண் பாண்ட உற்பத்தியாளர்கள் பானை உள்ளிட்ட மண்பாண்டங்களின் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, கம்பைநல்லூர், அதியமான்கோட்டை, அரூர், காரிமங்கலம், பென்னாகரம் அடுத்த நலப்பரம் பட்டி உள்ளிட்ட ஊர்களில் மண் பாண்டங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பொங்கல் விழாவுக்கு முழுமை யாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பானை, பானைகளுக்கான மூடி, அடுப்பு, கால்நடைகள் தண்ணீர் குடிக்க பயன்படும் தாழிகள், சிறுவர், சிறுமியர் பொங்கலிட்டு விளையாட உதவும் சிறு அடுப்புகள், சிறு பானை கலயங்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியில் மண்பாண்ட தொழிலார்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நலப்பரம் பட்டியைச் சேர்ந்த மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

நலப்பரம்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் பாண்டங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். தருமபுரி மாவட்டத்தில் பல இடங்களில் ஆங்காங்கே குழுக்களாக மண்பாண்ட உற்பத்தியாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக பொங்கல் விழா கிராமங்கள் மற்றும் நகரங்களில் மிகச் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் அந்த ஆண்டில் போதிய மழைப்பொழிவு இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் போதிய மழையின்றி விவசாயத் தொழில் முடங்கியது. இதனால், கிராம மக்கள் போதிய வருமானமின்றி விழாக்களை கொண்டாட முடியாமல் தவித்தனர்.

நடப்பு ஆண்டில் போதிய அளவில் மழை பெய் திருப்பதால் விவசாயம் ஓரளவு செழிப்படைந்துள்ளது. எனவே, கிராம மக்கள் அவரவர் திறனுக்கு ஏற்ப பொங்கல் விழாவை கொண்டாடுவர். எனவே, பொங்கல் விழாவின்போது மண்பாண்ட விற்பனை விறுவிறுப்பாக அமையும். இதுதவிர, மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற விழிப்புணர்வு சமீப காலமாக அனைவரிடமும் அதிகரித்து வருகிறது. இதனாலும் ஓரளவு மண்பாண்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதெல்லாம் சேர்ந்து நடப்பு ஆண்டு பொங்கல் விழாவின்போது மண்பாண்ட உற்பத்தியாளர் களுக்கு நிறைவளிக்கும் வகையில் வர்த்தகம் நடக்கும் என நம்புகிறோம். இதுதவிர, மழைக்காலத்தில் மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட முடியாமல் தவிக்கிறோம். இதுபோன்ற காலங்களில் அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபடுவோர் தொடர்ந்து நலிந்த நிலையிலேயே நீடிக்கிறோம். மண்பாண்ட தொழில் காக்கப்பட வேண்டுமெனில் எங்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து அரசு ஆய்வு நடத்தி மண்பாண்ட தொழிலை காக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்ட உற்பத்தியாளர்கள், தொழிலுக்கான மூலப்பொருளான மண் பெற கடும் சிரமங்களுக்கு உள்ளாகிறோம். முந்தைய காலங்களில் எங்கள் தொழிலுக்கு எளிதாக மண் கிடைத்தது போன்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x