

மலைப் பகுதியில் சாரல் காரணமாக சதுரகிரி மலைக்குச் செல்லபக்தர்களுக்கு வனத் துறையினர் அனுமதி அளிக்க மறுக்கப்பட்ட நிலையிலும், தடையை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்றனர்.
விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மார்கழி முதல் தேதியை முன்னிட்டு மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத் துறையினர் நேற்று முன்தினம் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சதுரகிரி மலைக்குச் செல்ல 600-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அடிவாரப் பகுதியில் உள்ள வனத் துறை கேட் முன் நேற்று காலை திரண்டனர். அப்போதுசாரல் மழை பெய்ததால், பக்தர்கள் மலையேற வனத் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
சுமார் 9 மணி அளவில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பக்தர்கள் தங்களை மலையேற அனுமதிக்குமாறு வனத் துறையினரிடம் வலியுறுத்தினர். ஆனால், வனத் துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்தனர்.
மேலும் வனத் துறையினர் தங்கள் கேட்டை அடைக்க முயன்றனர். அப்போது பக்தர்கள் அதைதள்ளிக்கொண்டு மலைப் பாதைக்குள் நுழைந்தனர். எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறி பக்தர்கள் மலையேற முயன்றனர்.
அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. வனத் துறையினரால் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வனத் துறையினரின் கட்டுப்பாட்டை மீறி நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்றனர்.