

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு துணை வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே நடத்துகிறது. தமிழகத்தில் தற்போது வாக்காளர் சரிபார்த்தல் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்துக்காக துணை வாக்காளர்களின் பெயர்களுடன் கூடிய வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் துறை நேற்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 17-ம் தேதி நிலவரப்படி, 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆண், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர். இதன்மூலம், தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது.
மேலும், வழக்கம்போல் தமிழகத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 831 பேர் அதிகமாக உள்ளனர். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி, 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆண்கள், 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 பெண்கள், 5 ஆயிரத்து 472 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருந்தனர்.
அதன்பின் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணிகள் நடைபெற்றன.
இதன் அடிப்படையில் மார்ச்23-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி, 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆண், 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பெண், 5 ஆயிரத்து 790 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் இருந்தனர்.
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், தொடர்ந்து வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. செப்டம்பர் 1-ம் தேதி முதல் நவ.30-தேதிவரை வாக்காளர் சரிபார்ப்பு திட்டப்பணிகளும் நடைபெற்றன. அதன்பின், நவ.30- முதல் டிச.6-ம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப்பணிகளுக்கான அவகாசம் வழங்கப்பட்டது.
இவற்றின் கீ்ழ், மொத்தமாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 285 ஆண், 2 லட்சத்து 19 ஆயிரத்து 735 பெண், 283 மூன்றாம் பாலினத்தவர் என 4 லட்சத்து 25 ஆயிரத்து 303 பெயர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 921 ஆண், 1 லட்சத்து 39 ஆயிரத்து 662 பெண் மற்றும் 149 மூன்றாம் பாலினத்தவர் பெயர்கள் பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும், 2 லட்சத்து 55 ஆயிரத்து 644 ஆண், 2 லட்சத்து 19 ஆயிரத்து 129 பெண், 203 மூன்றாம் \பாலினத்தவர் என 4 லட்சத்து 74 ஆயிரத்து 976 பேரது முகவரி விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.