

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்கு எதிரான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை- கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது 2011-ல் வெளியிடப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கைக்கு எதிரானது. சென்னை- புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலை அமைக்க கடந்த 1994-ல் மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியில் 17.5 மீட்டர் அகலத்தில் மட்டுமே சாலை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது இந்த சாலை சுற்றுச்சூழல் அனுமதி இன்றி விரி வாக்கம் செய்யப்படுகிறது. முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.
அதனால், கிழக்கு கடற்கரை சாலை யில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுவரும் சாலை விரிவாக்கப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். 1994-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு முரணாக சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை சீரமைத்து, பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு 1-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிழக்கு கடற்கரை சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.