

குடிபோதையில் வாகனம் ஓட்டி, நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முதியவர்கள் மீது மோதிய விபத்தில், அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் கடந்த 1-ம் தேதி காலை 6 மணி அளவில் அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மேனன்(68), தனது மனைவி ராதிகாவுடன்(65) சாலையோரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே தாறுமாறாக வந்த கார் ஒன்று, அவர்கள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சேகர் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பாண்டிபஜார் போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விபத்து ஏற்படுத்தியது அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ்(40) என்பவரின் கார் என்பதும், காரை ஜார்ஜின் நண்பரான மனோஜ் இசோ(39) என்பவர் குடிபோதையில் ஓட்டி வந்ததும், இருவரும் அவர்களின் தோழியான நினாமோகன் என்பவரை ஜெயின்ஸ் வீனஸ் கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்பில் இறக்கிவிட்டு வரும்போது இந்த விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. அதையடுத்து மனோஜ் இசோ போலீஸில் சரண் அடைந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், மனோஜ் இசோ தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.சேஷசாயி முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, மனோஜ் இசோவும், ஜார்ஜும் குடிபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு, மனிதாபிமானமே இல்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த சசிகுமார் மேனனும், அவரது மனைவியும் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மனோஜ் இசோவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில், ஜாமீனுக்காக விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் இசோ குடிபோதையில் வாகனத்தை ஓட்டி நடைபயிற்சி மேற்கொண்ட முதியவர்கள் மீது மோதி படுகாயம் ஏற்படச் செய்துள்ளார். எனவே சிகிச்சை பெற்றுவரும் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.20 லட்சத்தை அவர்களின் வங்கி கணக்கில் டிச.19-க்குள் செலுத்த வேண்டும். அத்துடன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பிணையப் பத்திரத்துடன் இருநபர் உத்தரவாதம் அளித்து கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தலைமறைவாகவோ அல்லது சாட்சிகளைக் கலைக்கவோ முயற்சிக்கக் கூடாது’’ என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளார்.