

ஒரே மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் வாகனங்களில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்துப் புகார் அளித்தும் கே.கே.நகர் போலீஸார் புகாரை வாங்க மறுப்பதாக வாகன உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான டாடா மேஜிக் வாகனங்கள் கே.கே.நகரில்தான் அதிகம் உள்ளன. இதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கே.கே.நகரில் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில் சமீபகாலமாக கே.கே.நகர் காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ள முனுசாமி சாலை, லட்சுமிபதி சாலை, அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் வாகனங்களின் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.
வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பைனான்ஸ் போட்டு வாகனங்களை இயக்கும் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு 4000 ரூபாய் மதிப்புள்ள பேட்டரி திருடு போவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பான ஒன்று.
ஆரம்பத்தில் ஓரிரண்டு வாகனங்களில் உள்ள பேட்டரிகள் திருடு போனபோது கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றவர்களை போலீஸார் விரட்டியுள்ளனர். ''உங்கள் வாகனங்களை நீங்கள்தான் பாதுகாப்பாக காம்பவுண்ட் சுவர் கட்டி உள்ளே நிறுத்திக்கொள்ள வேண்டும்'' எனப் புகாரை வாங்க மறுத்து போலீஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது பேட்டரி திருடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. விளைவு ஒரே மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் பேட்டரிகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாகன உரிமையாளர் குமார் என்பவர் கூறும்போது, “கடந்த ஒருமாதமாக எங்கள் வாகனங்களின் பேட்டரிகளைத் திருடிச் செல்கிறார்கள். புகார் கொடுத்தால் போலீஸார் வாங்குவதே இல்லை, ரோந்தும் வருவதில்லை.
கடந்த 3 நாளில் மட்டும் 4 பேட்டரிகள் தொடர்ச்சியாக காணாமல் போய்விட்டது. கடந்த 13-ம் தேதி நள்ளிரவு என்னுடைய வாகனத்தின் பேட்டரி காணாமல் போனது. மறுநாள் மதியம் என் உறவினர் தேவேந்திரன் என்பவர் வாகனத்தில் உள்ள பேட்டரி திருடு போனது. மறுநாள் அர்ஜுனன் என்பவர் பேட்டரி திருடு போனது. மறுநாள் என்னுடைய இன்னொரு வாகனத்தின் பேட்டரி திருடு போய்விட்டது.
போலீஸார் இங்கு வந்தாலே பல இடங்களில் சிசிடிவி காட்சிகளை எடுத்து ஆளைப் பிடிக்கலாம். பல்சர் வாகனத்தில் டிப் டாப்பாக வந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி இருந்தும் போலீஸார் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
காவல் ஆணையர் மூன்றாவது கண்ணின் மகத்துவத்தைச் சொல்லி திருட்டைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் கே.கே.நகர் போலீஸார் சிசிடிவி காட்சிகள் இருந்தும் திருடர்களைப் பிடிக்க மனமில்லை. சாதாரண பேட்டரியைத்தானே திருடுகிறார்கள் என்கிற எண்ணமாகக்கூட இருக்கலாம். ஆனால் திருட்டு திருட்டுதானே.