Last Updated : 17 Dec, 2019 07:23 PM

 

Published : 17 Dec 2019 07:23 PM
Last Updated : 17 Dec 2019 07:23 PM

திரைப்படம் வெளிவரும்போது மட்டுமே அரசியல் பேசுகிறார்: ரஜினி மீது புகழேந்தி விமர்சனம்

‘ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும்போது மட்டுமே அரசியல் பற்றி ரஜினி பேசுகிறார்’என அமமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சேலத்தில் அமமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் களத்தை நோக்கி வருவார் என எதிர்பார்த்த நிலையில், நீதிமன்றத்தை நாடிச் செல்கிறார். தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர் நீதிமன்றம் செல்கிறார். தேர்தல் வராது என சிலர் மக்களைக் குழப்புகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை தமிழக முதல்வர், துணை முதல்வர் சிறப்பாக நடத்தி முடிப்பர். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர், முதல்வர் பழனிசாமி தேதி அளிப்பதாகக் கூறியுள்ளார். அப்போது, அதிமுகவில் இணைந்து, அரசின் செயல்பாட்டை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வேன்.

அமமுகவுக்கு அங்கீகாரம் வழங்கியதை எதிர்த்து, வழக்குத் தொடுத்துள்ளோம். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அமமுகவைப் பதிவு செய்துள்ளனர். இதுசம்பந்தமாக வரும் 3-ம் தேதி முழுமையாக தெரியவரும். அதன் பிறகே நீதிபதி முடிவு செய்வார்.

நடிகர் ரஜினிகாந்த் நல்லவர். பெங்களூருவில் டிடிஎஸ் பேருந்தில் நடத்துநராக இருந்து, தமிழக சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சம் தொட்ட அதிசயம் இங்கே தான் நிகழ்ந்துள்ளது. தமிழைத் தடுமாறிப் பேசி தலைவர்கள் உருவான வரலாறும் உண்டு. இன்னுமொரு பெரிய வரலாறு நடக்கும் போதும், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கும். அதன் பிறகும் தமிழக முதல்வராக பழனிசாமியே இருப்பார். இந்த வரலாறும், அதிசயமும் மட்டுமே நிகழும். ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும்போதும் அரசியல் பற்றி ரஜினிகாந்த் பேசுகிறார். அதன் பிறகு மறந்து விடுவார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வந்தால் தான், அரசியல் என்பது என்ன என்று அவருக்குத் தெரியவரும்''.

இவ்வாறு புகழேந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x