

குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததால், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரை ஜமாத் காப்பாளர் பொறுப்பிலிருந்து அவரது சமூகத்தினர் நீக்கியுள்ளனர்.
குடியுரிமை மசோதாவை கடந்த வாரம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதில் முக்கியமாக அதிமுகவின் 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் ஆதரவு காரணமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆதரவு இல்லாவிட்டால மசோதா நிறைவேறும் வாய்ப்பு குறைவு.
மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிமுகவை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஜான் எம்.பி. கடந்த வாரம் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகக் கட்சி முடிவின்படி வாக்களித்தார். ஆனால் இந்தச் சட்டம் இஸ்லாமியர்களை ஒதுக்குவதால் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளின் காப்பாளர் பதவியில் முகமது ஜான் எம்.பி. இருந்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அவர் வாக்களித்ததால், அப்பகுதி இஸ்லாமியர்கள் வரும் 20-ம் தேதி அவரது வீட்டை முற்றுகையிட முடிவெடுத்துள்ளனர். ஆனாலும் அவரை ஜமாத்திலிருந்து நீக்க வேண்டும் என அனைத்து ஜமாத் உறுப்பினர்களின் கோரிக்கைப்படி இன்று அவரை அனைத்து ஜமாத் காப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.
அதிமுக மாநிலங்கவையில் 2019-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் முகமது ஜான். இவர் 2011-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் செல்வாக்குமிக்க திமுக எம்.எல்.ஏ ஆர்.காந்தியைத் தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். அப்போதைய அதிமுக ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முகமது ஜானை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக்கினார்.
ஆனால் அடுத்த தேர்தலில் அவருக்குப் பதிலாக ஏழுமலை என்பவரை ராணிப்பேட்டை தொகுதியில் நிறுத்தினார். இதில் மீண்டும் திமுகவின் ஆர்.காந்தி வென்றார். அதே மாவட்டத்தில் உள்ள நிலோபர் கபில் அமைச்சராக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கூட்டணிக்குக் கொடுத்தது போக அதிமுகவுக்கு 2 இடங்கள் இருந்தன. அதில் முகமது ஜானை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் எடப்பாடி பழனிசாமி.