

சிவகங்கை மாவட்டத்தில் இறந்தோர், ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடியால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு டிச.27-ம் தேதியும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், சாக்கோட்டை, கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு டிச. 30-ம் தேதியும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றன.
முதற்கட்ட தேர்தலுக்கு 7,509 வாக்குச் சாவடி அலுவலர்கள், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 7,153 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். இதுதவிர மண்டல அலுவலர்கள், பறக்கும் படை என 2 ஆயிரம் பேருக்கு மேல் தேவைப்படுகின்றனர். இதனால் ஆள் பற்றாக்குறையால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பணி ஒதுக்கீடு வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிங்கம்புணரி ஒன்றியத்தில் வணங்காமுடிப்பட்டியில் உடல்நிலை காரணமாக ஞானசவுந்தரி என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இறந்தோர், ஓய்வுப் பெற்றோர், விருப்ப ஓய்வுப் பெற்றோருக்கும் தேர்தல் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் காளையார்கோவில் ஒன்றிய ஆசிரியர்களுக்கு 110 கி.மீ.-க்கு அப்பால் உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்திலும், தேவகோட்டை, சிங்கம்புணரி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 100 கி.மீ.-க்கு அப்பால் உள்ள திருப்புவனம் ஒன்றியத்திலும் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணி ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களிலேயே மூன்று பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அருகருகே உள்ள ஒன்றியங்களில் பணி வழங்கப்படும். ஆனால் இந்த முறை 2 ஒன்றியங்களுக்கு அப்பால் பணி வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு 2 கட்டத் தேர்தலிலும் பணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் 2 பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்கள் பணிபுரியும் இடங்களிலும், கடைசி வகுப்பு மட்டும் பணி ஒதுக்கப்பட்ட இடங்களிலும் நடைபெறும். ஆனால் இந்த முறை 3 வகுப்புகளும் பணி ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே நடைபெறுகின்றன. இதனால் 100 கி.மீ.-க்கு அப்பால் சென்று வர சிரமமாக உள்ளது, என்று கூறினர்.
தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கணினி மூலம் ரேண்டம் முறையில் தான் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் தவறுதலாக பணி வழங்கப்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன,’ என்று கூறினார்.