

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகம் டிச.23 வரை திடீரென விடுமுறை அறிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்களித்தன. முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் சேர்க்காமல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் மாணவர்கள் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்துக்கு டிச.23 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. டிச.23 வரை வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டிச. 24 முதல் ஜன.1 வரை பல்கலைக்கழகத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை
என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விடுமுறையும் சேர்வதால் நாளையிலிருந்து ஜனவரி 1 வரை விடுமுறை காலமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.