

மதுரையில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுக கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற எம்எல்ஏ-களுக்கு, அவர்கள் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதியில் அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களை எம்எல்ஏ-க்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும், தொகுதிக்கு தேவையான பணிகளை செயல்படுத்திடவும் தொகுதியின் வளர்ச்சிப்பணிகளை பற்றி ஆலோசிக்கவும், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால், மதுரை கே.புதூரில் அமைந்துள்ள வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அந்த தொகுதி அதிமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான விவி.ராஜன் செல்லப்பா, தனது புறநகர் மாவட்டத்திற்குட்பட்டப்பகுதியில் நடக்கும் ஊரகப்பகுதி உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார்.
இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கலந்து கொண்டு அதிமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சித்தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் எம்எல்க்கள் விவி.ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், எம்எஸ்பாண்டியன், ராஜசத்தியன், சீத்தாராமன் மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், கிழக்கு மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை 100 சதவீதம் வெற்றிப்பெற கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரம், வியூகம் பற்றி ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்எல்ஏ தன்னுடைய தொகுதி நலனுக்காகவும், மக்களை சந்திக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றநிலையில் ஒரு அமைச்சரே, எம்எல்ஏ-க்களுடன் கலந்து கொண்டு உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்கள் முறைப்படி மாவட்ட உள்ளாட்சித்தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.