

மக்களின் மனநிலைக்கேற்ப கூட்டணியை முடிவு செய்வோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 14-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்தின் பின்புறம் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல் போன்ஸ், துணைத் தலைவர்கள் வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து தையல் இயந்திரம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, சைக்கிள், சலவை இயந்திரம், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஊன்றுகோல்கள், வேட்டி, சேலை, கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாசன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
ஜி.கே.மூப்பனாரின் 14-வது நினைவு நாளில் காமராஜரின் லட்சியங்களை அடைய உறுதியேற்றுள்ளோம். கருத்துக் கணிப்புகளை நான் எப்போதும் குறைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வாக்களித்த பிறகே தெரிந்துகொள்ள முடியும்.
தமாகா எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எல்லோரும் கேட்கிறார்கள். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. தமாகாவைப் பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணியில் இருக்கிறோம். மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் வரை சென்று மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து வருகிறோம். எனது முதல்கட்ட சுற்றுப்பயணம் டிசம்பரிலும், 2-வது கட்ட பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் முடியும். அதன் பிறகு மக்களின் மனநிலைக்கேற்ப யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு வாசன் கூறினார்.