

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக இன்று வழக்குத் தொடுத்துள்ளது. நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்களித்தன.
முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் சேர்க்காமல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் மனுவைத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், “இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யாத இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் உள்ளது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 14-க்கு எதிராக இந்தச் சட்டம் இருக்கிறது. எனவே இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி முன்பு பி.வில்சன் கோரிக்கை வைத்தார். வழக்கை நாளை பிற வழக்குகளுடன் விசாரிக்க, தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.
ஏற்கெனவே இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வழக்குத் தொடுத்துள்ளன. நேற்று இந்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்குத் தொடுத்தது. மசோதாவை ஆதரித்து வாக்களித்த அசாம் கன பரிஷத் அமைப்பும் இதற்கு எதிராக வழக்குத் தொடுக்க உள்ளது. எனவே, நாளை இந்த வழக்கு விசாரணையில் அனைவரையும் இணைத்து விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.