Published : 17 Dec 2019 01:39 PM
Last Updated : 17 Dec 2019 01:39 PM

மாணவர்கள் மீதான தாக்குதல்; கேள்வி கேட்கவே பயப்படவேண்டும் என்கிற எண்ணத்தை எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்படுத்த விழும் அடி: கமல் கண்டனம்

இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது. இனத்தின் பெயரால் நாட்டைப் பிரித்து, தனக்குச் சாதகமாக்கிச் செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உள்ளது. அந்த வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில்தான் இருந்திருக்கிறது, என கமல் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை கடந்த வாரம் மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் கடும் போராட்டம் நடக்கிறது. தென் மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் முன் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்..

தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் -அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு

தன்னில் செழித்திடும் வையம்

102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது.

இந்தியாவின் முதுகெலும்பு எனச் சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு செத்துக் கொண்டிருக்கும் போது அதைத் தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி.

சரிபாதி விழுக்காடான பெண்கள் வயது பாரபட்சமின்றி உயிர் பயத்தில் வாழும் நேரத்தில், சட்டத்தின் மூலம் அதைத் தெளிவிக்காமல் விட்ட பிழைகளைச் செய்வது அரசு மக்களுக்கு எதிராகத் தொடுக்கும் போர் வியூகம்.

எதிர்காலத்தின் தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கும் போது, கண்ணீர் புகை குண்டுகள் எறிவதும் காக்கிகளைக் கொண்டு தாக்குவதுதான் அரசாங்கத்தின் பதில். பெட்ரோலின் விலை ரூபாய் 70-ஐத் தொட்டபோது குஜராத்தில் கோடிகள் நஷ்டம் என்று கொதித்தவர், தான் ஆளும்போது நாட்டில் பெட்ரோலின் விலை 78 ரூபாய்.

பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி விண்ணை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும்வேளையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான அவசரம் என்ன? என்கிற கேள்வி தான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே.

பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமையை இலங்கை இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை ?ஆண்டுகாலமாக தமிழகம் தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில்?

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, தப்பி தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை இனி என்ன? கேள்விகளுக்கு விடை அளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும்வேலைதான் டெல்லியிலும், அலிகரிலும், அசாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.

மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமை மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்படவேண்டும் என்கிற எண்ணத்தை எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி.

மாணவனுக்குப் பதில் இல்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, பொருளாதாரம் சரியில்லை, குற்றங்கள் கட்டுக்குள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லவே இல்லை, எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்தச் சட்டம். கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை.

இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது. இனத்தின் பெயரால் நாட்டைப் பிரித்து புதிய நாடு பிறந்து விடும் என ஆசை வார்த்தை பேசி, சட்டத் திருத்தங்களை தனக்குச் சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உள்ளது. அந்த வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில்தான் இருந்திருக்கிறது.

அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில்தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராகச் செல்லும் இந்த தனி நாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓயமாட்டேன். நாம் யாருமே ஓயக்கூடாது. நம் படையோடு மோத வழியில்லை எனத் தெரிந்துகொண்டு நம் கால்களுக்கு இடையில் பாம்புகளை விடுகிறார்கள்.

பாம்பைக் கண்டு பயப்படவில்லை எங்கள் இளைஞர் கூட்டம் என்பதை உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி எழ வேண்டும். கரம் கோத்து தலை முழுகுவோம். இவர்களை தாய் திருநாட்டின் இப்பிணிகளை.

தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது”.

இவ்வாறு கமல் செய்தியாளர் சந்திப்பில் தனது அறிக்கையை வாசித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பதிலளித்து பேசிய அவர், ''குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் செய்யப்பட்ட துரோகம். இந்தப் பிரச்சினை சாதி, மதம், இனத்தைக் கடந்தது. இது மாநில எல்லைகளையும் கடந்தது. இது தேசம் சம்பந்தப்பட்ட விஷயம். இளைஞர்கள் அரசியல் ரீதியாக குரலை உயர்த்தியுள்ளார்கள்.

அதைத் தவறு என்று சொல்ல முடியாது. மாணவர்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்று கேட்காதீர்கள். அனைவரும் போராடுகிறார்கள். நானும் மாணவன் தான். நானும் எனது குரலை உயர்த்தியுள்ளேன். கேள்விக்குப் பதில் தராமல் கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் முயற்சிதான் நடக்கிறது’’ என்று கமல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x