சென்னை மெட்ரோ ரயில் முதல் தடத்துக்கு ரூ.350 கோடியில் நவீன வசதியுடன் பணிமனை: 10 ஹெக்டர் நிலம் தேர்வு செய்ய முடிவு

சென்னை மெட்ரோ ரயில் முதல் தடத்துக்கு ரூ.350 கோடியில் நவீன வசதியுடன் பணிமனை: 10 ஹெக்டர் நிலம் தேர்வு செய்ய முடிவு
Updated on
1 min read

சென்னையில் முதல் தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பராமரிக்கவும், தூய்மைப்படுத்தவும் ரூ.350 கோடியில் புதிய பணிமனை அமைக்கப்படவுள்ளது. இதற்காக மீனம்பாக்கத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 10 ஹெக்டர் நிலத்தைப் பெற மெட்ரோ ரயில் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையில் 23 கி.மீ. தூரத்துக்கு முதல்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்ணாரபேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம்,

அரசினர் தோட்டம், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, டிஎம்எஸ், தேனாம்பேட்டை நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய 10 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதைகளிலும், சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய 6 ரயில் நிலையங்கள் உயர்மட்ட பாதையிலும் அமைகின்றன.

இந்த வழித்தடத்தில் இயக்கவுள்ள மெட்ரோ ரயில்களை பராமரிக்கவும், தூய்மைப்படுத்தவும், கண்காணிக்கவும் புதிய பணிமனை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு மொத்தம் 10 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. மீனம்பாக்கம் அல்லது விம்கோ நகரில் இந்த பணிமனை அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் பணிமனை அமைக்க மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மெட்ரோ அதிகாரிகள் தகவல்

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘மெட்ரோ ரயில்களை பராமரிக்கவும், கண்காணிக்கவும், தூய்மைப்படுத்தவும் போதிய ரயில் பாதைகள் வசதிகளுடன் மொத்தம் 30 ஹெக்டர் பரப்பளவில் கோயம்பேட்டில் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மெட்ரோ ரயில் சேவைகளுக்கு இதுபோதுமானது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இங்குள்ள வசதிகளே போதுமானதாக இருக்கும். ஆலந்தூரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு வழித்தட மெட்ரோ ரயில்களும் தடம் மாறி செல்லும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், முதல் வழித்தடத்தில் இயக்கப்படும் (வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்) மெட்ரோ ரயில்களுக்கு வசதியாகவும், மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கும் மற்றொரு பணிமனை அவசியமாக இருக்கிறது.

மீனம்பாக்கம் பகுதியில்..

இதற்கான 10 ஹெக்டர் நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மீனம்பாக்கம் அல்லது விம்கோ நகரில் இந்த பணிமனை அமையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக மீனம்பாக்கத்தில் 10 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நிலம் கையகப்படுத்தியவுடன் டெண்டர் விட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக ரயில் பாதைகள் அமைத்தல், கண்காணிப்பு அலுவலகம், பழுதுநீக்கும் கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு என மொத்தம் ரூ.300 கோடியில் இருந்து ரூ.350 கோடி வரை செலவாகும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in