

எஸ்.கோவிந்தராஜ்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி அமைந்துள்ள நிலத்துக்கான தொகையை 30 ஆண்டுகளுக்கு முன்பே பொதுப்பணித் துறை வழங்கியும், அந்த நிலத்தை ஒப்படைக்காமல் வனத்துறை இழுத்தடித்து வருகிறது. இதனால் அணையைத் தூர்வாரி, கூடுதல் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர், தட்டக்கரை, தாமரைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் அதன் அடிவாரமான வரட்டுப்பள்ளம் பகுதியில் தேங்கி வந்தது. கடந்த 1974 -78-ம் ஆண்டில் ரூ.2 கோடி செலவில் அப்பகுதியில் சிறு அணை கட்டப்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இந்த அணையில் 34 அடிவரை நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 5000 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
வரட்டுப்பள்ளம் அணை
கட்டுவதற்கான பணிகள் துவங்கியபோதே, நீர்த்தேக்கம் மற்றும் மதகு அமைந்துள்ள 225 ஏக்கர்நிலத்துக்கான தொகையை
பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் வனத்துறைக்குவழங்கினர். இன்று வரை இந்த நிலத்தை பொதுப்பணித் துறை வசம் வனத் துறை ஒப்படைக்கவில்லை. மேலும், அணை அமைந்துள்ள பகுதி, தற்போது காப்புக்காடாக அறிவிக்கப் பட்டுள்ளதால், அணையைத் தூர் வாருதல், மதகுகளை இயக்குதல் போன்ற பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் மராமத்துப் பணிகளைக்கூட செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
இதேபோல கோபியை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பராமரிப்பு விவகாரத்திலும் வனத்துறைக்கும், பொதுப்பணித் துறைக்கும் இடையேயான பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கோபியை அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட கொங்கர்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை42 அடி உயரம் கொண்டதாகும். குன்றி, விளாங்
கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்யும் மழை நீர், இந்த அணைக்கு வந்து சேர்கிறது.
அணையின் மூலம் நேரடியாக 3000 ஏக்கரும், மறைமுகமாக 2 000 ஏக்கரும் பாசனம் பெற்று வருகின்றன. இந்த அணையை தூர்வாருதல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வனத்துறை தொடர்ந்து தடை விதிப்பதால், சேறும், சகதியும் சேர்ந்து அணையில் நீர் தேக்கும் அளவு பாதியாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி கூறியதாவது:
வரட்டுப்பள்ளம் அணை நிரம்பினால், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர்
பெரிய ஏரி, தந்திபாளையம் ஏரி, வேப்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகியவற்றுக்குச் சென்று, அதன்பின் பவானி ஆற்றில் கலக்கும். தொன்றுதொட்டு இருந்த இந்த நடைமுறையால், அப்பகுதி நிலங்கள் பாசனவசதி பெற்றன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
வரட்டுப்பள்ளம் அணையை பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்க வனத்துறை மறுப்பதால், அணை தூர்வாரப்படவில்லை. இதனால் நீர் தேங்குவது குறைந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்குச் செல்லும் கால்வாய்ப் பகுதிகளில், யானைகள் வருவதைத்தடுக்க வனத்துறையினர் அகழி வெட்டியுள்ளதால்,பாசனத்துக்கு நீர் செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர் திறப்புக்கான மதகுகளைக்கூட பொதுப்பணித்துறையினர் பராமரிக்க முடியவில்லை.
அதேபோல, குண்டேரிப்பள்ளம் அணையில் 140 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்க முடியும். கடந்த 21 ஆண்டுகளாக அணை தூர்வாரப் படவில்லை. வண்டல் மண் அகற்றப்படவில்லை. இதனால், 108 மில்லியன் கனஅடி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. தொடர் மழையால், இரு அணைகளும் நிரம்பி கடந்த 10 நாட்களுக்கு மேலாக உபரி நீர் வெளியேறி வருகிறது.
இரு அணைகளும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள நிலையில், மண்ணும், மணலும் அணையில் குவிந்து உள்ளது. மணல் போன்ற கனிமங்களை அரசே எடுத்து, தனது கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வனத்துறை மேற்பார்வையில் தங்கள் சொந்த செலவில் வண்டல் மண்ணை எடுத்து அணைகளைத் தூர்வார விவசாயிகள் தயாராக உள்ளனர்.இந்த கோரிக்கையை ஆட்சியர், தலைமை வனப்பாதுகாவலர் என அனைத்து தரப்பிலும் முறையீடு செய்து விட்டோம். இனியும் இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம், என்றார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது:
வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் அணைகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த அணை அமைந்துள்ள நிலப்பகுதி வனத்துறைக்கு சொந்தமானதாகும்.
வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ள நிலத்தைப்பெற பொதுப்பணித் துறை தொகை செலுத்தியிருந்தாலும், இதுவரை நிலம் வகைமாற்றம் செய்யப்படவில்லை. வனத்தை ஒட்டிய அணைகளாக இருப்பதால், இந்த நிலம் தொடர்பான எந்த முடிவையும் மத்திய அரசின் அனுமதி பெற்றே எடுக்க முடியும். வரட்டுப்பள்ளம் அணைக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வருவதால், அப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றுவது என்பது விதிகளுக்கு முரணானதாகும். இருப்பினும், அணையைத் தூர்வாருதல் தொடர்பாக விவசாயிகள் மனு அளித்தால், அவற்றை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளோம், என்றார்.