

உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள 19 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளில் 4 இடம் பாமகவுக்கும், 3 இடம் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்ட நிலையில், 12 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
அவ்வாறு அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட 12 வேட்பாளர்களில் 6 பேர் பொது வேட்பாளர்களாகவும், 6 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் டிடிவி தினகரன் அணிக்குச் சென்று விட்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்தவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், டிடிவி அணிக்குச் சென்று மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பிய விருத்தாசலம் எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன், உண்மையான அதிமுகவினரை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருத்தாசலம் அதிமுக ஒன்றிய பொருளாளரான புகழேந்தி, 1-வது வார்டுக்கு விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவருக்கு சீட் வழங்கப்படாமல், அர்ஜுனன் என்பவருக்கு வழங்கப்பட்டதாகவும், இவர் திமுகவிலிருந்து, அதிமுகவுக்கு வந்த 6 ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. மேலும் இவர் 2016-ம் ஆண்டு, இதே பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக தனது மனைவியை களமிறக்கியவர். தற்போது டிடிவி அணிக்குச் சென்றுவிட்டு வந்த நபருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பது தன்னைப் போன்ற நீண்ட காலம் கட்சியில் இருப்பவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக புகழேந்தி தெரிவித்தார்.
13-வது வார்டு எஸ்.சி. பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் 13 வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு ஏற்கெனவே கவுன்சிலராக இருந்த உச்சிமேடு மதியழகன், இந்த முறை தனது மனைவி இளவரசி பெயரில் விருப்பமனு தெரிவித்து, அதிமுக மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவனிடம் மனு அளித்துள்ளார். அவரும் தேர்தல் பணிகளை கவனிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து, மதியழகனும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிய நிலையில், தற்போது 13-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவி வி.டி.கலைச்செல்வனின் ஆதரவாளரும், டிடிவி அணிக்குச் சென்று திரும்பிய ஐயப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியைடந்த மதியழகன், உண்மையான அதிமுகவினருக்கு சீட் வழங்கவில்லை எனவும், டிடிவி அணிக்கு கலைச்செல்வன் சென்றபோது, நாங்கள் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, மாவட்டச் செயலாளரிடம் வேறு பட்டியலைக் கொடுத்து அவருடைய ஆதரவாளர்களுக்கே சீட் பெற்றுக் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேபோன்று 19-வது வார்டு எஸ்.சி. பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், விருத்தாசலம் அதிமுக எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் வண்ணான்குடிகாடு ரங்கசாமி, தனது மனைவி சிவமணி பெயரில் விருப்பமனு அளித்துள்ளார். ஆனால் 19-வது வார்டு டிடிவி அணிக்குச் சென்று திரும்பி சிவலிங்கத்தன் மனைவி தனம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டு அவர் அதிமுக வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ரங்கசாமி, தனது மனைவி சிவமணியை சுயேட்சையாக களமிறக்கியுள்ளார்.
அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவனை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் தொடர்புகொள்ள முடியாத நிலையில், விருத்தாசலம் எம்எல்ஏ வி.டி.கலைசெல்வனிடம் கேட்டபோது, "வேட்பாளர்கள் தேர்வு, முறைப்படி கட்சியின் அமைப்புச் செயலாளர் முருகுமாறன், மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் முன்னிலையில் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சம் ஏதுமில்லை. குற்றச்சாட்டு கூறும் நபர்கள், ஏற்கெனவே கவுன்சிலராக இருந்த போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மேலும் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் விசுவாசியாக செயல்படுவதும் தெரியவந்ததால் அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர ஏற்கெனவே தொடர்ந்து இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதைக் காட்டிலும், கட்சியின் இதர உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.