

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றுஅமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அமைச்சர்கடம்பூர் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை, தற்போது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் அட்டவணை வழங்கப்பட்டு நிறைவேற உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் உள்ள கூட்டணி அப்படியே தொடர்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, வார்டுகள் பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
`கார்ப்பரேட்டை நோக்கி திமுக செல்கிறது’ என்ற குற்றச்சாட்டை வைத்து, யதார்த்தத்தை உணர்ந்து திமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வெளியேறி உள்ளார். மக்களை நாங்கள் நம்புகிறோம். மக்கள் மன்றத்தை நம்பாமல் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக போராடியது.
குடியுரிமை சட்டத்தை நாங்கள் ஆதரித்தாலும்கூட தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விஷயத்தில் இரட்டை குடி உரிமை வேண்டும் என்ற வாதத்தை வைத்துள்ளோம். எந்த சட்டமும் சட்டமாக்கப்படும்போது சில மாறுபட்ட கருத்துகள் வரும். அப்போது,புதிய ஷரத்துகள் சேர்க்கப்படுவது இயற்கை. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு நிலை எடுத்திருந்தாலும்கூட, எங்களது கருத்தை பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.