

அறிவியல் துறையும் தொழில் துறையும் இணைந்து செயல்படவேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரோவின் சதீஷ் தவான், உயர் திறன் எரிசக்தி பொருட்களின் இந்திய அமைப்பு (எச்இஎம்சிஇ) மற்றும் சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து நடத்தும் உயர் திறன் எரிசக்தி பொருட்கள் தொடர்பான 12-வது சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார். எச்இஎம்சிஇ சார்பாக விஞ்ஞானிகள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருதுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
உயர் திறன் கொண்ட எரிசக்தியானது, தரைவழி மற்றும் வான்வழி பாதுகாப்புக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளித் துறையில் உலகப் புகழ் அடைந்துள்ளன.
சந்திராயன், மங்கள்யான் போன்ற உள்நாட்டில் தயாரான செயற்கைக்கோள்கள் உலகநாடுகளை வியப்படையச் செய்துள்ளன. அறிவியல் துறையினரும் தொழில் துறையினரும் இணைந்துசெயல்பட வேண்டும். விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவித்தால்தான், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைய முடியும்.
இதுபோன்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, மாணவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நல்ல தொடர்புகள் ஏற்படுத்தும். சென்னை ஐஐடி கடந்த 30 ஆண்டுகளாக உயர்திறன் எரிசக்தி துறையில் முன்னிலையில் உள்ளது.
நான் 3 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளேன்.ஒருமுறை முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் எளிமை, விஞ்ஞான திறமை ஆகியவை எனக்கு வியப்பை அளித்தது. வீதிவிதியாக நாளிதழ் போட்ட சிறுவன், இந்தியாவின் மிக பிரபலமான குடியரசுத் தலைவராக மாறினார்.
அவரின் ‘அக்னி சிறகுகள்’ நூலை எல்லாரும் கட்டாயம் ஒரு முறையாவது வாசிக்கவேண்டும். வாழ்க்கையை எளிமையாக எப்படி வாழவேண்டும் என்று அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து துறையிலும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றினால் மட்டுமே அப்துல்கலாம் கண்ட வல்லரசு இந்தியா சாத்தியமாகும்.
இவ்வாறு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பேசினார்.
இதையடுத்து, இஸ்ரோ உருவாக்கிய ராக்கெட்கள் எஞ்சின் மாதிரிகள் உள்ளிட்ட எரிசக்தி சார்ந்த பொருட்கள் அடங்கிய கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, சதீஷ் தவான் விண்வெளி மையம் இயக்குநர் ஏ. ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வரும் 18-ம் தேதி (புதன்கிழமை)வரை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.