

அதிகாரிகள் செயல்பாட்டில் முதல்வர் நாராயணசாமி அதிருப்தி அடைந்து அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பரிசு பொருள் தருவது உட்பட முக்கிய விஷயங்கள் தொடர்பாக முடிவு எடுக்க முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று இரவு கூடியது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். ஆனால் இக்கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது. அதிகாரிகள் செயல்பாட்டில் முதல்வர் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அமைச்சரவை கூட்டத்தில் 10 நிகழ்ச்சி நிரல் வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான கோப்புகளை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. முக்கியத்திட்டங்கள் தொடர்பான இக்கோப்பில் ஒன்று மட்டுமே தயார் செய்து அதிகாரிகள் வந்ததால் முதல்வர் கடும் கோபமடைந்து விமர்சித்தார்.
இறுதியில் கோபத்துடன் கூட்டத்தை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் அமைச்சரவை உத்தரவிட்ட அனைத்து நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் கோப்புகளை எடுத்து வர உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.