Published : 16 Dec 2019 08:45 PM
Last Updated : 16 Dec 2019 08:45 PM

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம்; ரூ.27 கோடி செலவில் 900 புதிய வண்டிக்கடைகள்: உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை


சென்னை மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, 27 கோடி ரூபாய் செலவில், 900 புதிய வண்டிக்கடைகள் அமைத்து கொடுக்கப்படும், மீனவர்களுக்கு 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியை அழகுப்படுத்துவது, மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி,சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாகவும், தற்போது, அங்கு 900 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாகவும், அதற்காக, 27.4 கோடி ரூபாய் செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தத்தை பொறுத்தவரை, 457 கார்கள், 2 ஆயிரத்து 271 இருசக்கர வாகனங்கள், 80 பேருந்து போன்றவற்றை நிறுத்தும் வகையில் ராணி மேரி கல்லூரி, கலங்கரை விளக்கம், உள்ளிட்ட இடங்களில் அருகில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மெரினாவை சுத்தப்படுத்த 175 துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், 6 இடங்களில் அதி நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கலங்கரை விளக்கம் அருகில் மீன் வியாபாரிகளுக்கு ரூ.66லட்சம் செலவில் 300 மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், உணவு பாதுகாப்பு விதிகள் மீறி செயல்படுபவர்கள், உணவு விற்பனைக்கான தர சான்று பெறாதவர்கள் மெரினாவில் கடைகள் நடத்த அனுமதிக்கவே கூடாது என எச்சரித்தனர்.

மேலும், மெரினாவில் 900 கடைகள் அமைப்பதற்கான எடுத்த முடிவுகள், லூப் சாலையில் நடைப்பாதை மற்றும், சைக்கிள் செல்ல பாதை உள்ளிட்ட மெரினா கடற்கரையை அழகுப்படுத்த மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x