Last Updated : 16 Dec, 2019 07:35 PM

 

Published : 16 Dec 2019 07:35 PM
Last Updated : 16 Dec 2019 07:35 PM

ஊராட்சி தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி போட்டி: ஆர்வமுடன் வேட்பு மனுத் தாக்கல்

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 90 வயது மூதாட்டி ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் முதல்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு வழங்க இறுதி நாளான இன்று பலரும் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்து சென்றனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள முருங்கபட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மூதாட்டி கனகவல்லி (90) உறவினர்கள் புடைசூழ ஆர்வமுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கனகவல்லி ஏற்கெனவே, இந்த ஊராட்சி தலைவராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி கடந்த 20 ஆண்டாக முருங்கபட்டி கிராம ஊராட்சி தலைவராக பதவியில் இருந்துள்ளார். இவரது மகன் பார்த்தசாரதியும் கடந்த 20 ஆண்டாக கிராம ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்.

அழகேசபூபதி குடும்பத்தினரை தவிர்த்து வேறு எந்த கட்சி பிரமுகரையும் கிராம மக்கள் தேர்வு செய்ததில்லை. கடந்த பல ஆண்டாக இவர்களது குடும்பத்தினர் மட்டுமே கிராம ஊராட்சி தலைவர் பதவியை அலங்கரித்து வந்துள்ளனர்.

இம்முறை முருங்கபட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவியில் போட்டியிட வேண்டி, அழகேசபூபதியின் மனைவி கனகவல்லி காலை உறவினர்கள் புடைசூழ வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கனகவல்லி ஏற்கனவே, ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளதால், அடிப்படை தேவைகளை அறிந்து, உடனுக்குடன் நிறைவேற்ற அளித்து வந்ததால், மக்களின் செல்வாக்கு பெற்ற வேட்பாளராக கனகவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கனகவல்லி கூறும் போது, ‘‘கிராமத்துக்கு தேவையான சாலை, மின்சாரம், பொது சுகதார வசதிகளை உடனுக்குடன் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம். இதனால், எங்கள் குடும்பத்தின் மீது பொதுமக்களுக்கு தனிப்பட்ட முறையில் அபிமானம் கொண்டுள்ளனர்.

தேர்தலுக்காக எங்களை ‘ஒரு ரூபாய் கூட செலவு’ செய்ய பொதுமக்கள் விட்டதில்லை. பொதுமக்கள் தங்களின் சொந்த பணத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்கள் குடும்பத்தினரை தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றியை அளித்து வருகின்றனர். இந்த உள்ளாட்சி தேர்தலிலும் மக்களால் வெற்றி பெற்று, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, நம்பிக்கைக்கு பாத்திரமான குடும்பமாக விளங்குவோம் என்பதில் ஐயமில்லை,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x