

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு, வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. கடந்த 6 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 65,659 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் தாக்கல் செய்தனர்.
அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அவர்கள் அனைவரும் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்காக அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை 17-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற 19-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
அப்போது ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற தெளிவாக தெரிந்துவிடும். வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.