மதுரையில் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளர்கள்: தேர்தல் அலுலகங்களில் அலைமோதிய கூட்டம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
3 min read

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று (திங்கள்கிழமை) மதுரை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குவிந்தனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஊர்வலத்துடன் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகங்கள் திருவிழா கோலம் பூண்டிருந்தன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகள், 214 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 3,273 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 420 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் உள்பட மொத்தம் 3,930 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் மாவட்டம் முழுவதும் தேர்தல் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திருவிழா போல் கூட்டம் கூடியது.

வேட்பாளர்களை அவரது ஆதரவாளர்கள் ஊர்வலத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்து வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், ஆதரவாளர்கள் வேட்பாளர்களுக்கு சாதாரண மலர் மாலைகள் முதல் ஆளுயுர மாலைகளை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சில வேட்பாளர்களை அவரது ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியில் தோளுக்கு மேல் தூக்கி ஆர்ப்பரித்தனர்.

மதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிழக்கு ஒன்றிய அலுவலகங்களில் ஊரக உள்ளாட்சிப்பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் குவிந்தனர். அவர்களுடன் ஆதரவாளர்கள், கட்சியினர் திரண்டு வந்ததால் இந்த அலுவலகப்பகுதிகள் சாலையில் போலீஸார் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். குறிப்பிட்ட தூரத்திற்கு முன் வாகனங்களை தடுத்து நிறுத்தி வேட்பாளர்களையும், அவர்கள் ஆதரவாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய பல வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் வேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்து எடுத்து வராமல் தடுமாறினர். அவர்களுக்கு பூர்த்தி செய்வதற்கு உதவுவதற்காக வழக்கறிஞர்கள், தேர்தல் அலுவலகங்கள் பகுதிகளில் முகாமிட்டு வேட்புமனுக்களை நிரப்பிக் கொடுத்தனர். வேட்புமனுதாக்கல் செய்வதற்கு வந்த ஆதரவாளர்களுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சி வேட்பாளர்கள், வசதிப்படைத்த கிராம பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர்கள் மதிய சாப்பாடு வழங்கி கவனிக்கவும் செய்தனர்.

சுயேட்சை வேட்பாளர்கள், தங்கள் குழந்தைகள், குடும்பத்தினருடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலை தமிழக தேர்தல் ஆணையம் ஊழியர்கள் வீடியோவில் பதிவு செய்தனர். மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகங்களில் அதிமுக வேட்பாளர்கள் அக்கட்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா தலைமையில் வந்தனர்.

அதுபோல், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு திமுக மாவட்டத்தில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள், அவர்கள் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மதுரை மேற்கு ஒன்றியம் 8வது வார்டு திமுக சார்பில் கார்த்திக் ராஜா, ‘‘நான் மதுரை மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளராக கட்சியில் பொறுப்பில் உள்ளனர். இதற்கு முன் சின்னப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக இரு முறை சுயேச்சையாக வெற்றிப்பெற்றுள்ளேன். அதனால், நான் எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல பரீட்சயமானவன். தற்போது ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதால் இன்னும் கிராமங்களுக்கு கூடுதல் நிதி பெற்று அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். கடந்த 3 ஆண்டாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாததால் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு சுத்தமாக கிராமங்களில் இல்லை. அதை நிறைவேற்றுவது என்னுடைய முதல் கடமை என்று சொல்லி மக்களிடம் ஆதரவு திரட்டுகிறேன், ’’ என்றார்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு(4வது வார்டு) போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.ஜெகதா ரதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘நான் பிபிஇ படித்துள்ளேன். முதல் முறையாக தற்போதுதான் தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தல் அனுபவமும் இல்லை. ஆனால் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களிடம் என்னுடைய ஆர்வத்தை தெரிவித்தேன். என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் ஏற்கணவே அரசியல் கட்சியில் இருந்ததால் அவர்கள், உடனே ஒப்புக் கொண்டு என்னை இந்த உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட வைத்தனர், ’’ என்றார்.

எழுச்சியால் வெற்றி உறுதி: திமுக

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி கூறுகையில், ‘‘போட்டியிட சீட் கேட்டு எப்போதும் இல்லாத வகையில், திமுக.வில் கடும் போட்டி இருந்தது. அந்த ஆர்வத்தை உண்மையாக்கும் வகையில் பல்லாயிரம்பேர் திரண்டுவந்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திமுக . வெற்றி பெறுவதற்கு இதுவே அத்தாட்சி. கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இது தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். மக்களவை தேர்தல் முடிவை விட கூடுதலாகவே திமுக.வின் வெற்றி அமையும். இதை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக இடங்கள் ஒதுக்கி உள்ளோம். அவர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது’’ என்றார்.

100 சதவீதம் வெற்றி உறுதி: அதிமுக

புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா கூறுகையில், ‘‘அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து இந்த உள்ளாட்சித்தேர்தலை அசுர பலத்துடன் சந்திக்கிறது. வேட்பாளர்கள் வெற்றிகரமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மவாட்டத்தில் எங்கள் வெற்றி என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. தேர்தல் களப்பணிகளுக்காக ஒவ்வொரு கிராமங்களிலும் தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளோம். அவர்கள் துணையாக மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.

கூட்டணி கட்சிகளுக்கு மன திருப்தியோடு வெற்றியை உறுதி செய்யக்கூடிய இடங்களை ஒதுக்கிவுள்ளோம். எங்கள் வெற்றி சட்டமன்ற இடைத்தேர்தலில் இருந்தே தொடங்கிவிட்டது. இனி அதை திமுகவால் தடுக்க முடியாது, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in