

'குயின்' இணையதளத் தொடருக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தொடரைப் பார்த்து ஆராய்ந்த பின்னர் அதற்குத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'குயின்' இணையதளத் தொடருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததைப் போல, 'குயின்' இணையதளத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும்'' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், ''மனுதாரரின் மனுவைப் பொறுத்தவரை, படத்தைப் பார்த்து, அது கற்பனைக் கதையா? என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கு நான்கு வார கால அவகாசம் ஆகும்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ''மோடி வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பொறுத்தவரை, அவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இந்த வழக்கில் அப்படி அல்ல, 2017-ம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைச் சம்பவங்களைத் தழுவிய கற்பனைக் கதை'' என வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.