Published : 16 Dec 2019 06:51 PM
Last Updated : 16 Dec 2019 06:51 PM

விவசாயம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரி: சமுதாயப் பணிக்காக பதவியை உதறித் தள்ளிய அண்ணாமலை; பின்னணி என்ன?

இந்திய அளவில் உயர் பதவியான ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி, பத்தாண்டுகளுக்குப் பின் அதைத் தூக்கி எறிந்து இளைஞர்களைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ளார் அண்ணாமலை ஐபிஎஸ். ஓய்வு நேரத்தில் விவசாயத்திலும் ஈடுபடுகிறார்.

அவரது நெஞ்சுரத்தின் பின்னணியில் உள்ள லட்சியம் என்ன? என்பதை அறியலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு இளைஞனுக்கும் உயரிய லட்சியங்கள் இருக்கும். அதில் முக்கியமான ஒன்று சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஆட்சிப்பணி, காவல் பணிக்கு வருவது என்பதாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் நேரடியாக அதிகாரத்துடன் மக்கள் பணியை ஆற்றலாம் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். கஷ்டப்பட்டு ஆட்சிப் பணி, காவல் பணிக்கு வரும் நபர்கள் மக்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் உன்னதமாகப் பணியாற்றுபவர்கள் பலர்.

இப்படி வாழ்வின் உச்சத்துக்கு வந்த தமிழக இளைஞர்களில் ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பணியில் வென்று கர்நாடக கேடராக பல மாவட்டங்களில் எஸ்.பி.யாகப் பணியாற்றி, பெங்களூர் நகர துணை ஆணையராகப் பணியாற்றும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது முடிவு பெங்களூரு தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.

முதல்வர் குமாரசாமியுடன் மோதல், அதனால் ராஜினாமா? என்றெல்லாம் செய்தி பரவியது. ஒரு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆளும் அரசியல் தலைவர்களுடன் உரசல் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு வரும்போது அவர்கள் டெல்லிக்கு அயல் பணியில் செல்ல வாய்ப்புள்ளது. அப்படியானால் அதையும் செய்யாமல் அண்ணாமலை ராஜினாமா செய்ததற்கு அவர் குமாரசாமியுடன் மோதலில் ஈடுபட்டது காரணமல்ல என்பது தெரியவந்தது.

அண்ணாமலை தான் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, நேரடியாகக் களத்தில் இறங்க, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூரில் சொந்த மாவட்டத்தில் தனது நிலத்தில் விவசாயம் செய்துகொண்டே, காணாமல்போன ஏரிகளை, நீர்நிலைகளை மீட்பது, காங்கேயம் காளை இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அறிந்து 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் அவரிடம் பேட்டிக்காக அணுகியபோது அவர் பல்வேறு ஆழமான கருத்துகளைத் தெரிவித்தார்.

ஐபிஎஸ் பணியைத் துறப்பது சாதாரண நிகழ்வல்ல. அதற்கு நீண்ட திட்டமிடல், துணிச்சல், உறுதி இருக்க வேண்டும். அது அவரிடம் உள்ளதா? அவரது பேட்டி மூலம் நீங்களே முடிவு செய்யலாம்.

பலருக்கும் முக்கியமான லட்சியமே வாழ்க்கையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவதாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் அப்படிப்பட்ட உச்சமான பதவியை உதறித் தள்ளியதற்கு என்ன காரணம்?

எனக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் தான் இருந்தேன். 22 வயதில் லக்னோவுக்கு எம்பிஏ படிக்கச் சென்றபோது முதன்முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிடைத்த அனுபவம்தான் என்னை மாற்றியது. தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் சின்ன வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கும். ஆனால் எனக்கு அங்கே கிடைத்த வாழ்க்கை அனுபவம்தான் சிவில் சர்வீஸுக்கு வரவேண்டும் என்ற முடிவை நோக்கித் தள்ளியது.

எம்பிஏ படிக்கும் போது பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் செய்வோம். இரண்டு ஆண்டுகள் லோக்கல் ப்ராஜக்ட் செய்துள்ளோம். அவ்வாறு செய்யும்போதுதான் தமிழக சூழலில் வளர்ந்த எனக்கு அங்குள்ள சூழ்நிலையைப் பார்க்கும்போது பெரிய அளவிலான கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

50 ரூபாய்க்கு கொலை செய்கிறார்கள், ஐம்பது ரூபாய்க்கு பத்து பூரி தருகிறார்கள். அரசுப் பேருந்து பல மணிநேரம் தாமதமாக வந்தாலும் சரி, ரேஷன் கடை இரண்டு நாள் திறக்காமல் 3-ம் நாள் திறந்தாலும் சரியென்று எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்பார்ப்பு என்பது மிக மிகக் குறைவு. அவர்களைப் பொறுத்தவரை அரசு என்பது எங்கோ இருக்கிறது. நாம் எங்கோ இருக்கிறோம் என்கிற எண்ணம்தான். எதிர்பார்ப்புகளே அவர்களிடம் கிடையாது. அடிப்படை உரிமை கூடத் தெரியாது. அதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம்தான் வந்தது.

நாம் எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகத்திற்கும் இவர்களுக்கும் நிறைய தூரம் இருக்கிறது என்ற எண்ணம்தான் வந்தது. அப்போதுதான் முடிவு செய்தேன். சிவில் சர்வீஸ் மூலம் தேர்வாகி இதுபோன்ற மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதே காலகட்டத்தில்தான் 2008-ம் ஆண்டு மும்பையில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் என்னை மாற்றின.

அப்போதுதான் நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும், சிவில் சர்வீஸ் எழுத வேண்டும் என்று நினைத்தேன். முதல் முறை தேர்விலேயே வென்று ஐபிஎஸ் அதிகாரியானேன்.

அப்புறம் என்ன உங்கள் லட்சியப்படி அமைந்த வாழ்க்கைதானே. அதில் என்ன சலிப்பு?

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக வந்தேன். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வேலை செய்தேன். அதில் இரண்டு விஷயம். இதில் இருந்துகொண்டே சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பது சரிதான். ஆனால் நான் காவல்துறையில் பணிக்குச் சென்றதைப் பார்த்தால் முதல் நாள் என்ன பணியைச் செய்தேனோ அதைத்தான் நான் வெளியே வரும் வரை செய்தேன்.

பொதுமக்கள் வருவார்கள், பிரச்சினை மற்றும் குறைகளைச் சொல்வார்கள், தீர்த்து வைப்போம். ஒவ்வொரு நாளும் என்னுடைய வேலைப் பளு அதிகமாகி கொண்டே இருந்ததே தவிர குறையவில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்தேன். சமூகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. சொசைட்டி அப்படியேதான் இருக்கிறது. சொசைட்டி மாறுவது போல் எனக்குத் தோன்றவில்லை? நாம் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை சின்னச் சின்ன டிங்கரிங் வேலை செய்து கொண்டு மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறோம்.

ஆனால், என்ன நடக்கிறதென்றால் சமூகத்தில் அடிப்படை மாற்றம் செய்யாத காரணத்தினால் அது அப்படியே தான் இருக்கிறது. தகுதியில்லாத வேலை முறை, தகுதியில்லாத நடைமுறைகள் கோபத்தை வரவழைத்தன. உதாரணத்திற்கு ஆன்லைனில் செய்கிற வேலையைக் கூட மக்களை நேரில் வந்து செய்ய வைக்கிறோம்.

எனக்கு காவல்துறையில் கடைசி சில வருடங்கள் இருந்த பிரச்சினை என்னவென்றால் இந்த சிஸ்டத்தை மாற்ற முடியுமா? நம்மிடம் உள்ள சட்டங்கள் மூலமாக இதை மாற்ற முடியுமா? அல்லது உரிய பயிற்சி கொடுத்து தகுதியான நபர்களைத் தயார் செய்து இதை மாற்ற முடியுமா? அல்லது மூன்றாவது இதற்குத் தகுதியான நபர்களை (அவர்கள் அரசியலில் இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம், என்.ஜி.ஓக்களாக இருக்கலாம்.) கொண்டு வந்து மாற்ற முடியுமா? என்று நினைத்தேன்.

நீங்கள் சாதிக்க நினைப்பதை சாதாரண அண்ணாமலையாக இல்லாமல் ஐபிஎஸ் அண்ணாமலையாக சொன்னால்தானே உலகம் உற்று கவனிக்கும்?

கண்டிப்பாக உங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். நான் எதிலும் ஆழமாகச் செயல்பட முடியவில்லை என்பதை உணர்ந்தேன். அடிப்படையான விஷயத்தை மாற்றாமல் மேம்போக்கான செயல்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பது என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கை. கணவன் - மனைவி பிரச்சினை என்றால் மதுபோதையில் மனைவியை அடிக்கிறார் என்றால், அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன் மதுவால் ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏனென்றால் அரசு மதுபான விற்பனையில் 21,000 கோடி வேண்டும் என்று டார்கெட் நிர்ணயித்து விற்கிறது. மதுவை ஒழிக்காமல் எப்படி மது சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்?

இதில் எங்கே ராஜினாமா முடிவு வருகிறது?

நான் வெளிப்படையாக என்னுடைய வேலையைப் பற்றிச் சிந்தித்தபோது அதில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அண்ணாமலை ஐபிஎஸ் ஆக இருந்து சொல்வதை மக்கள் கேட்பார்கள் என்ற உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். கொஞ்சம் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும், அவர்களுக்கான உரிமையை அடைய அவர்களை போராட வைக்கவேண்டும். இந்த அடிப்படை சிஸ்டத்தை மாற்றி அமைக்க நாம் சில நேரம் முன்னால் போக வேண்டும். முன்னால் பாய வேண்டும் என்றால் ஓரிரண்டு அடி பின்னால் வைத்துதான் பாயவேண்டும். இது வாழ்க்கையின் தத்துவம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுத்தேன். நடக்குமா என்பது தெரியாத. ஆனால், முயல்கிறேன்.

நீங்கள் சொல்வது அடிப்படையான ஆதாரமான விஷயங்களில் கை வைக்கும் பிரச்சினை. இதில் பதவியிலும் இல்லாத நீங்கள் எப்படி சாதிப்பீர்கள்?

முக்கியமான கேள்வி கேட்டீர்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். தற்போது காவலன் செயலியை வேகமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் மாற்றம் வருமா, குற்றவாளி அஞ்சி தவறு செய்யாமல் இருப்பானா? என்றால் இல்லை. இதுபோன்ற விழிப்புணர்வு தேவைதான். சட்டம் மூலம் இது மாற்றப்படவேண்டும் என நான் நம்புகிறேன். ஆனால், குற்றவாளி யார், அவர்கள் நிலை என்ன, என்பதை நாம் யோசித்திருக்கிறோமா? நிர்பயா பிரச்சினைக்குப் பின் ஏன் மீண்டும் ஹைதராபாத் குற்றச்செயல் நடந்தது. நாம் டேட்டாக்களை வைத்து மட்டும் பேசக்கூடாது. ஹைதராபாத்தில் 4 குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்கள். அதை நாடே கொண்டாடியது. ஆனால், அந்தக் குற்றவாளிகள் வளர்ந்த சூழ்நிலையை நாம் பார்க்க மறுக்கிறோம்.

பல கிரிமினல்களைப் பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உரிமையையும் நாம் கொடுத்திருக்க மாட்டோம். அவர்கள் வாழும் இடமாகட்டும், வாழ்க்கைமுறையாகட்டும், மிக மோசமாக இருக்கும். ஒரு மனிதன் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சாதாரண நிலையில் வாழும்போது அவன் வளரும்போது அவனுக்கு நண்பர்களும் அதேபோன்றுதான் கிடைப்பார்கள். அது போன்ற ஆட்களை பத்து ஆண்டுகள் கழித்து இந்த சமூகத்தில் விடும்போது இது போன்ற செயல்கள் தான் நடக்கும்.

இதை மாற்ற வேண்டுமென்றால் அடிப்படையில் சமூக, பொருளாதார விஷயத்தில் கைவைத்துதான் ஆகவேண்டும். இந்தியாவில் இன்று பார்த்தால் பணக்காரன் பணக்காரன் ஆகிக் கொண்டிருக்கிறான். ஏழைகள் அப்படியேதான் இருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. பல்வேறு பொருளாதார நிபுணர்களும் சொல்கிறார்கள். அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் ஓட்டுப் போடுவான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு அந்த வாக்களித்த மக்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.

இந்த ஆண்டு பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள் இரண்டு பேர். அவர்களின் அடிப்படையான ஆய்வே என்னவென்றால் சமூக, பொருளாதார விஷயங்களை மாற்றினால் வறுமையை ஒழிக்கலாம் என்பது. பாலியல் வன்கொடுமையை ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. அதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.

இதுதான் போலீஸுக்கும் இந்த அண்ணாமலைக்கும் உள்ள வித்தியாசம். தற்போது ஒரு பிரச்சினையை வித்தியாசமாகப் பார்க்கும் அணுகுமுறை இந்தியாவில் வந்துவிட்டது என்று நம்புகிறேன்.

இதுபோன்ற குற்றச் செயல்களின் பின்னால் அரசியல் பலம் இருக்கிறது. அப்படியானால் இதுபோன்ற காரியங்களில் நீங்கள் இறங்கும்போது அரசியல் ரீதியாகவும் நிர்பந்தம் இருக்கும். எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

நான் இதுவரை பேசிய விஷயங்கள் சாதாரண விஷயங்கள். இப்போது கொஞ்சம் சீரியஸாகப் பேசுகிறேன். இது ஈஸியாகப் பேசி கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. இதன் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. அனைத்துப் பிரச்சினைகளையும் உணர்கிறேன். நான் காவல்துறைக்குச் செல்வதற்கு முன் கூட இதேபோன்று சொன்னார்கள். எனது தந்தை 15 ஆண்டுளுக்கு முன் போலீஸாரால் கடுமையாக, மோசமாக நடத்தப்பட்டார். அதற்காக நான் காவல் துறைக்குச் செல்லாமல் இல்லை. நான் ஆசைப்பட்டுதான் ஐபிஎஸ் ஆனேன். ஆனால், நீங்கள் கேட்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடையாது. ஆனால் நமது எண்ணங்கள் சரியாக இருந்தால் 2 பேரை உருவாக்கலாம்.

அது நான்காகும். நான்கு, எட்டு, நூறு என மாறும். மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்றால் முதலில் நான் மாறிக் காண்பிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன்.

நீங்கள் மாற்றம் அடிப்படையிலிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அனைத்தும் கார்ப்பரேட் மயமாகும் உலகில் என்ன செய்யப்போகிறீர்கள்?

பொதுவாகப் பார்த்தால் அரசியல் கட்சிகளும், பெரிய அளவிலான இயக்கங்கள் பணம் பண்ணும் விஷயங்களாக மாறியுள்ளது என்பது உண்மைதான். என்னுடைய கேள்வி என்னவென்றால் கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா? என்பதுதான். அரசியல் ஏன் மோசமாக மாறவேண்டும் என்று கேட்டால், மக்கள் மோசமாக இருப்பதால் நாங்கள் மோசமாக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்கள் எப்படியோ அப்படி நாங்கள் மாறி விட்டோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் சும்மா போனால்கூட ஓட்டுக்குப் பணம் கேட்கிறார்கள். அதனால் பணம் கொடுக்கிறோம் என்பதே அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.

என்னுடைய எண்ணம் என்னவென்றால் ஒரு லீடரா? அரசியல் தலைவரா? என்ஜிஓ தலைமையாக வரும்போது நீங்கள் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இப்ப ரஜினிகூட என்ன சொல்கிறார் என்றால் ஆன்மிக அரசியல் என்கிறார். எதிர்பார்ப்பு இல்லாமல் வருபவரால்தான் மாற்றத்தைத் தர முடியும் என்று ரஜினி சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

ரஜினி நல்லவராக இருக்கலாம், தனிமனிதர்கள் நல்லவராக இருந்து அவருடன் இருப்பவர்கள் பணம் பண்ணும் எண்ணத்துடன் இருந்தால் என்ன மாற்றம் வரும்? இங்கு நல்ல தனி மனிதர் தலைவராக வேண்டுமா? அல்லது அமைப்பே நல்லதாக இருக்க வேண்டுமா?

மிக மிக முக்கியமான கேள்வி. அது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்று அல்ல. காலம் எடுத்துக்கொள்ளும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பெரிய 100 ஆகும். ஆனால் 100 ஆன பின்னர், அதனுடைய வேகம் அதிகம் இருக்கும். மிக வேகமாக ஆயிரமாக மாறிவிடும். ஆனால் 100 ஆவதற்கு மிகப்பெரிய நேரம் எடுத்துக்கொள்ளும்.

இன்றைய இளைஞர்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்களா?

இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள் அனைவரும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. காரணம் அவர்களின் வாழ்க்கை சூழல். அவர்களைச் சுற்றி இருக்கக்கூடிய எல்லாமே நெகட்டிவ் விஷயங்களாக உள்ளன. ஆனால் நான் இதுபோன்ற இடங்களில் அவர்களைத் தலைமை ஏற்க விரும்பவில்லை. ஆனால் உங்களுடன் கூட இருக்கிறேன், சேர்ந்து போகலாம் என்று வரும்போது என்னைப் பொறுத்தவரை ஏதாவது நடக்கும் என்று நம்புகிறேன்.

முட்டாள்கள்தான் உலகத்தை மாற்றுவார்கள் என்று அரிஸ்டாட்டில் சொல்வார். நிறைய பேர் நான் வேலையை விட்டு வெளியே வந்தபோது முட்டாள் என்று சொன்னார்கள். ஆனால் நான் இந்த உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

உங்கள் பாதையில் நம்பிக்கையான முகங்கள் தெரிகின்றனவா?

நிறைய பேர் உள்ளனர். நான் பலரிடம் பேசி வருகிறேன். பலர் என்னிடம் பேசுகிறார்கள். எனக்கு அரசியல் பற்றி தெரியாது. ஆட்சி முறை பற்றித் தெரியாது. எங்களுக்கு சொல்லித் தாருங்கள் என்று கேட்கிறார்கள். அதிகமானவர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவு போடுகிறார்கள். ஆனால் ஒரு மாற்றம் நடக்க வேண்டும் என்றால் அந்த முக்கியமான மாற்றத்தக் கொண்டு வரும் கருவியை நான் புரிந்துகொள்ள வேண்டும்.

யார்? எங்கு இருக்கிறார்? லைட்டை எங்கு அடித்தால் எங்கு ஒளி வரும் என்று புரிந்துகொள்ள வேண்டும். நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். யார் எங்கே என்று சொல்லுங்கள்? நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்கிறார்கள். நாங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்ய வேண்டும்? எத்தனை நாள் செலவிடவேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

அரசியலை முழு நேர விஷயமாக நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பகுதி நேரமாக அதைச் செய்ய முடியுமா? என்று கேட்பவர்களுக்கு ஒரு மேடை தேவைப்படுகிறது. அதை அமைத்துக் கொடுப்பது என் வேலை.

உங்கள் வீட்டில் உங்கள் ராஜினாமாவை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

அந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று சொல்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்த காலத்தில்கூட போலீஸுக்கான எந்தவித அடையாளத்தையும் வைத்துக் கொண்டதில்லை. என்னுடைய காரில் கூட சைரன் வைத்துக்கொண்டதில்லை. பிரதமர் மோடி அதை அகற்றும் உத்தரவு இடும் முன்பே நான் செய்து காட்டிவிட்டேன். போலீஸ் அதிகாரிக்கு அரசு அளிக்கும் ஆர்டர்லியைக்கூட நான் எப்போதும் வைத்துக்கொண்டதில்லை. ஆர்டர்லி வைத்துக்கொள்ளும் அதிகாரிகளை நான் வைக்கக்கூடாது என்று சொல்லவில்லை. அரசாங்கம் அளிக்கும் சலுகைதான் அது. ஆனால் ஒரு மனிதனை எனக்காக வேலை செய்ய வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை/ அதனால் நான் ஆர்டர்லி முறையை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.

இதை என் குடும்பத்தார் நேரடியாகப் பார்த்து இருக்கிறார்கள். நான் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் அப்பா, அம்மா, மனைவியை ஏமாற்ற முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நாம் ஒரு நல்ல விஷயத்திற்காக ஓடிக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்குப் புரிந்தது. நான் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து சாதாரணமாக வந்து இந்த நிலையை அடைந்தவன். எங்கேயோ பிறந்து, எங்கேயோ படித்து குடியரசுத் தலைவர் முன்னால் பேசக்கூடிய, மூன்று பிரதமர்களைச் சந்திக்கக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.

நான் எதுவும் தவறு செய்யவில்லை. நேர்மையாக இருக்கிறேன். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்ற எண்ணத்தில் அனைத்து விஷயங்களையும் பார்த்துவிட்டேன். 35 வயதாகிவிட்டது. இந்த சமுதாயத்தை மாற்ற முடியாவிட்டால் எப்போது இறங்கப் போகிறோம் என்கிற எண்ணத்தில் இறங்கினேன். ஆனால், என் வீட்டில் இதை எளிதாக ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. நான் வெளியேறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே அவர்களைச் சிறிது சிறிதாக தயார்படுத்தினேன் என்றுதான் சொல்லவேண்டும்.

முடிவெடுக்கும் முன் வேறு யாரிடமாவது விவாதம் நடத்தினீர்களா?

என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்னை மாதிரி சர்வீஸ் எடுத்து வென்றவர்கள் எத்தனை பேர் சாதித்துள்ளார்கள், வென்றார்கள், தோற்றார்கள் என்பதை விட அவர்களுடைய நோக்கத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறார்கள், தோற்றவர்கள் என்ன காரணத்திற்காக தோற்றார்கள் என்பது பற்றியெல்லாம் வீட்டில் பெரிய அளவில் விவாதம் நடத்தியுள்ளேன். நண்பர்களிடம் பேசி விவாதித்திருக்கிறேன். பல சீனியர் அதிகாரிகளிடம் பேசினேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமியிடம்கூட நான் போய் பேசினேன்.

முதல்வர் குமாரசாமியுடன் மோதலில் ஈடுபட்டதால் ராஜினாமா என்று ஊடகங்களில் பரப்பப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை?

அப்படி எதுவும் இல்லை. அவர் அருமையான மனிதர். அவர் என் ராஜினாமாவை ஏற்கவில்லை. நீங்கள் இளம் வயதாக இருக்கிறீர்கள். இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து பெரிய பதவியில் வந்து, நீங்கள் நினைப்பதைச் செய்யலாம் என்று கூறினார். அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அவருடைய சொந்த மாவட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்று துணை ஆணையர் ஆக்கினார்.

தனியாக அழைத்துச் சென்று, 'நீங்க தைரியமா இறங்கி பண்ணுங்க உங்களுக்கு வயது இருக்கிறது நீங்கள் டிஜிபியாக வரலாம்' என்று சொன்னார். பின்னர் என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவர் என்னை வாழ்த்தி ட்வீட் போட்டார் . அண்ணாமலைக்கு மிகப் பெரிய லட்சியம் இருக்கிறது. அதில் அவர் வெல்ல வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். மற்றவர்கள் சொல்வது போல் அல்ல, மீடியாவில் சொல்வது போல் அவர் என்னைத் திட்டிவிட்டார் நான் வெளியில் வந்து விட்டேன் என்று சொல்வதெல்லாம் பொய். அப்படி நடந்திருந்தால் நான் டெபுடேஷனில் சென்றிருக்கலாம். அவர் என்னைப் புரிந்துகொண்டார் என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் என்பதுதான் உண்மை.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், கொட்டாம்பட்டி கிராமம். அப்பா பத்தாவது வரை படித்தவர். அம்மா ஆறாவது வரை படித்தவர். விவசாயக் குடும்பம். சின்ன வயதில் இருந்து கல்வி குறித்து மிகுந்த முயற்சி எடுத்தார்கள். கரூரில் ஏழாவது வகுப்பு வரை படித்தேன். பரமத்தி வேலூரில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து கோவையில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவுடன் என்னுடைய எண்ணம் ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்பதே.

வேறு எந்த ஆசையும் என் மனதில் இல்லை. அதனால் எம்பிஏ முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று கேட் எக்ஸாம் எழுதி ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிக்கச் சென்றேன். அந்த இரண்டு வருடங்கள் தான் எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய பாடத்தைக் கொடுத்தது. வாழ்க்கையை மாற்றி அமைத்தது அதன் பின்னர்தான். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி கர்நாடகாவில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். காவல் அதிகாரியாக இருந்தபோது ஏகப்பட்ட டிரெய்னிங். வெளிநாடுகளுக்குச் சென்று மக்கள் வாழ்வியல் சம்பந்தமான விஷயங்களைக் கற்றேன். எனக்கு எப்பொழுதுமே படிப்பில் ஆர்வம் உண்டு. கல்வி முழு வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

தலைமை, தலைவர் என்பது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

நான் சாதாரண மனிதன். எனக்குத் தனி மனிதனாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதற்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நான் நினைக்கிறேன். நம்முடைய எண்ணம் உயர்ந்ததாக இருக்கும்போது சாதிக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

தலைவர், தலைமை என்பதெல்லாம் பிரிட்டிஷ் காலத்து விஷயங்கள். அவை எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. உங்களிடம் ஒரு விஷயம் இருக்கிறது என்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது . நாம் இணைந்து செயல்பட்டு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற விஷயங்கள் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அனைவரும் வரவேண்டும் சேர்ந்து செயல்படுவோம் என்பதுதான் என்னுடைய வழிமுறை.

தமிழகத் தலைவர்களில் உங்களை மிகவும் கவர்ந்த தலைவர்கள் யார்?

எனக்கு காமராஜரைப் பிடிக்கும். அண்ணாவை நிரம்பப் பிடிக்கும். பெரியாரின் வாழ்வியல் முறை மிகவும் பிடிக்கும். கலைஞரின் மிகச்சிறந்த விசிறி நான். அவர் சமூக அக்கறையுடன் அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டது மிகவும் பிடிக்கும். இப்போது இருக்கின்ற தலைவர்கள் குறைவான அனுபவத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய காலம் கொடுத்தால் அவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக வரலாம். அதனால் இப்போது அவர்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது.

ஆனால், தமிழ்நாட்டினுடைய பாரம்பரிய, கலாச்சாரத்தைப் பார்த்தால் மிகவும் பிரம்மிப்பு உண்டாகும். மிகச் சிறந்த தலைவர்கள் அதிகம் பேர் உருவாகியிருக்கிறார்கள். ராஜாஜி காலத்திலிருந்து ஜெயலலிதா வரை சிறந்த தலைவர்கள் உருவாகியுள்ளனர். உலகத் தலைவர்களில் பராக் ஒபாமாவை மிகவும் பிடிக்கும்.

ரஜினி, கமல் அரசியல் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். காரணம் எல்லோருமே ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ரஜினி, கமல் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது பற்றி கேட்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்முடைய ஆழமான அரசியல் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது போன்ற ஆழமான ஒரு சமுதாயத்தில், பல வகையான தலைவர்கள் நாங்கள் இறங்கிச் செய்கிறோம் என்று வரும்போது அதை வரவேற்போம்.

அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதன் பிறகு விமர்சனம் செய்யலாம். அதற்கு முன் விமர்சனம் செய்வது சரியல்ல. சினிமா துறை என்று யாரையும் ஒதுக்க முடியாது. அப்படி இருந்தால் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் வந்திருக்க முடியாது.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

இப்போதைக்கு நான் என்னுடைய சொந்த எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விரும்புகிறேன். அதிகம் பயணிக்கிறேன். பலரையும் பலவித சூழ்நிலையையும் புரிந்துகொள்ள முயல்கிறேன். போலீஸாக இருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது வெளியே வந்துள்ளேன். உங்களை மாதிரி பத்திரிகையாளர் பார்வையில் பார்க்க விரும்புகிறேன். விவசாயி பார்வையில் பார்க்க விரும்புகிறேன்.

பல விஷயங்களைப் பார்த்த பின்னர் இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. என் போன்ற ஒருமித்த கருத்துள்ளவர்களுடன் பேசி அதன் பின்னர் முடிவெடுப்பேன்.

தமிழ்நாடு, கர்நாடகா எந்த மாநில அரசியல்?

கண்டிப்பாக தமிழ்நாடுதான். என்னைப் பெற்றெடுத்து வாழ வைத்த பூமி.

தற்போது உங்களுடைய செயல்பாடுகள்?

என்னுடைய ராஜினாமாவை இப்போதுதான் அங்கீகரித்துள்ளார்கள். இதன் பின்னர்தான் நான் வேகமாக இறங்க வேண்டும். நீர் நிலைகளைப் பாதுகாப்பது, மறைந்துபோன நீர்நிலைகளைக் கண்டறிந்து மீட்பது போன்ற முயற்சியில் அதற்கென உள்ள குழுவினருடன் இணைந்து செயல்படுகிறேன்.

அதேபோன்று காங்கேயம் காளைகளைப் பாதுகாப்பது, மீட்டெடுப்பது. மக்களிடம் கொண்டு செல்வது என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன். இதுதவிர விவசாயம் செய்து வருகிறேன். என் வீட்டு அருகில் பல பயிர்களைப் பயிரிட்டுள்ளேன்.

தற்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி வரும் இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?

மிக அதிக நம்பிக்கை தருகிறார்கள். நாட்டைப் பற்றிய மிக அக்கறையுடன், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று வருகிறார்கள். உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களும் தேவைப்பட்டால் பாராட்டுகிறீர்கள் அல்லது விமர்சிக்கிறீர்கள் என்பது நல்ல விஷயம்.

தற்பொழுது வரும் இளைஞர்கள் அவர்களுக்காக வரவில்லை உண்மையாக சிந்தித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வருகிறார்கள். சாதாரண நிலையிலிருந்து அதிகம் வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மண்ணின் மீது, மக்களின் மீது அக்கறை இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் நான் கவனித்து வருகிறேன். அனைவருடனும் கை கோக்க நான் விரும்புகிறேன். அதுபோன்று வருபவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் கூட ஈடுபடுவேன்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x