

மத்திய அரசின் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதாக திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'மிஷன் அந்தியோதயா' திட்டத்தின் கீழ் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட கிராமமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெளியான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
மொழுகம்பூண்டி கிராமம் என்பது சிறிய கிராமமாகும். 748 ஆண்களும், 742 பெண்களும் என மொத்தம் 1,490 பேர் இக்கிராமத்தில் வசிப்பதாக 2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து கொடுத்துள்ளதற்காக சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கிராம மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் மொழுகம்பூண்டி கிராமத்தில் ஆட்சியர் கந்தசாமி நேற்று (டிச.15) ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, "மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களாக சாலை பராமரிப்பு, குடிநீர், மின்சாரம், கல்வி, கிராம குடியிருப்பு மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவிலேயே, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது. இந்த ஊராட்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முன் மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக ஆய்வு செய்த ஆட்சியரிடம், தங்கள் கிராமத்துக்குத் தேவையான வசதிகள் மற்றும் திட்டங்களைத் தெரிவித்து, அதனை நிறைவேற்றித் தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். பின்னர் ஆட்சியர், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியைப் பார்வையிட்டு, அதனை விரைவாக முடிக்க வேண்டும் என பயனாளிகளை அறிவுறுத்தினார்.
இதையடுத்து மாணவர்களை அழைத்து, அவர்களது வாசிப்புத் திறன் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயசுதா, கோட்டாட்சியர் மைதிலி மற்றும் பலர் உடனிருந்தனர்.