Published : 16 Dec 2019 01:21 PM
Last Updated : 16 Dec 2019 01:21 PM

ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சவாலை ஏற்றார் ஜெ.அன்பழகன்

சென்னை

ஸ்டாலின் என்னைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? நான் ரெடி நீங்கள் ரெடியா என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய சவாலை ஜெ.அன்பழகன் ஏற்று அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, “திமுக தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறது. நல்ல வழக்கறிஞர்களிடம் இந்த உத்தரவு குறித்து கேட்டு ஸ்டாலின் தெளிவு பெற வேண்டும். தன் தகுதிக்கும் பதவிக்கும் ஏற்றாற்போல் ஸ்டாலின் பேச வேண்டும்.

ஸ்டாலின், என்னைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார். என்னைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி ஸ்டாலினுக்கு இல்லை. ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. தனிப்பட்ட வழக்கை குறித்துப் பேச வேண்டுமென்றால், ஸ்டாலின் குறித்து இந்த ஆண்டு முழுவதும் பேசலாம். என் பணிகளில் குறைகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டட்டும்.

ஆனால், நான்கு வார்த்தையை ஒழுங்காகப் பேசத் தெரியாத ஸ்டாலின், நா குழறி என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்றால் அவர் மேடை அமைக்கட்டும். அவர் என்னைக் குறித்துப் பேசட்டும், நான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்” என சவால் விடுத்திருந்தார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் பேட்டி அளித்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நாங்கள் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தவில்லை. திமுக நீதிமன்றத்தை நாடியதால் தான் முறைப்படுத்தாத 9 மாவட்டங்களில் தேர்தல் தவிர்க்கப்பட்டது. எனவே நாங்கள் அச்சுறுத்தவில்லை. முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகினோம்.

இன்றைய பேட்டியில் அமைச்சர் சி.வி. சண்முகம் நிதானத்தில் பேட்டி கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்.

முரசொலி நாளிதழ், பெயர் குறிப்பிடாமல் தள்ளாடும் அமைச்சர் என்று குறிப்பிட்டதை தன்னை விமர்சனம் செய்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் எப்படி எடுத்துக் கொண்டார் என்று புரியவில்லை . அதிமுக தற்போது ஐசியூவில் உள்ளது”.

இவ்வாறு ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x